புதுடெல்லி,
சீனாவில் உருவான உயிர்க்கொல்லி வைரஸ் கொரோனா, 40-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி உள்ளது. அந்த வகையில் ஈரான் நாட்டிலும் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.
அங்கு இந்த வைரசுக்கு புதிதாக 11 பேர் பலியாகி இருப்பதாகவும், 385 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் ஈரான் சுகாதார அமைச்சகம் நேற்று கூறியது.
இதன்மூலம் ஈரானில் இந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 54 ஆகவும், பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 978 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஈரானில் மீன்பிடிக்க சென்ற 900 இந்திய மீனவர்கள் தவிப்பதாகவும், அவர்களில் 700 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
இப்போது காஷ்மீரை சேர்ந்த 240 மாணவர்கள், ஈரானில் உள்ள சிராஸ், டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் படித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக ஈரானில் தவிக்கிற இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.
இதையொட்டி மத்திய வெளியுறவு ராஜாங்க மந்திரி வி.முரளதரன் கூறும்போது, கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில் மீனவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் ஈரானில் சிக்கியுள்ளதாக மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், இது தொடர்பாக நிலைமையை மதிப்பீடு செய்து. உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வருகிறது என கூறினார்.
இதற்கிடையே டெஹ்ரானில் உள்ள இந்திய தூதர் கடாம் தர்மாதிகாரி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், நாடு திரும்ப விரும்பும் இந்தியர்கள் திரும்பி வருவதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.