

லண்டன்,
இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் வர்த்தக மந்திரி பதவி வகிப்பவர் அலோக் சர்மா (வயது 52). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
நேற்று முன்தினம் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பெருநிறுவன திவால் மற்றும் ஆளுமை மசோதா மீதான விவாத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அடிக்கடி கைக்குட்டையால் தனது முகத்தை அவர் துடைத்துக்கொண்டார்.
அவர் அவதிப்படுகிறார் என உணர்ந்த எதிர்க்கட்சியான தொழில் கட்சியின் நிழல் வர்த்தக மந்திரி எட் மிலிபாண்ட், அவருக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் வீட்டுக்கு திரும்பி விட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அலோக் சர்மா, தன்னை வீட்டில் சுய தனிமைப்படுத்திக்கொண்டார். அவர் விரைவில் குணம் அடைந்து திரும்புவதற்கு நிழல் வர்த்தக மந்திரி எட் மிலிபாண்ட் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இருப்பினும் அலோக் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா, இல்லையா என்பது இனிமேல்தான் தெரிய வரும். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை 15 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு ஒன்றில் அலோக் சர்மா நூற்றுக்கணக்கான எம்.பி.க்களுடன் நின்று கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் வாக்கெடுப்பு நிறுத்தப்பட்டு நேரில் வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில், அலோக் சர்மாவின் உடல்நலக்குறைவு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
நிழல் வெளியுறவு மந்திரி லிசா நந்தி, கடந்த 48 மணி நேரமாக நடந்துள்ள சம்பவங்கள், நாடாளுமன்றத்தில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது கடினம் என்பதை காட்டி உள்ளன என குறிப்பிட்டார். மெய்நிகர் நடைமுறைகளை (காணொலி காட்சி உள்ளிட்ட) நிறுத்தி விட இங்கிலாந்து அரசு எடுத்த முடிவு பொறுப்பற்றது என சாடினார்.
இங்கிலாந்து நாட்டில் முதலில் இளவரசர் சார்லஸ் அடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மீண்டு வந்தது நினைவுகூரத்தக்கது. இப்போது வர்த்தக மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடைபெற்றிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.