கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை; அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரவக்குறிச்சி போக்கு வரத்து பணிமனையில் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Published on

அரவக்குறிச்சி,

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கு கொண்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கைகளை நன்றாக கழுவும்படியும் அறி வுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவக் குறிச்சி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இயங்கும் அனைத்து பஸ்களின் கைப்பிடி பகுதிகள், இருக்கைகள், பொருட்கள் வைக்குமிடங்கள் என பஸ்சின் உள் பகுதியில் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இப்பணிகளை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கிளை மேலாளர் தாமோதரன், உதவிப் பொறியாளர்கள் பழனியப்பன், கார்த்திக் ஆகியோர் பார்வையிட்டனர்.

வெள்ளியணை அருகே காணியாளம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமை தாங்கினார். இதில் காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் தமிழ் அழகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்லையா மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமலும், வராமலும் தடுக்க செய்யவேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்தும் விளக்கி கூறினர்.

பின்னர் கைகள் கழுவும் முறைகள், பிறருக்கு பாதிப்பில்லாமல் இருமல் மற்றும் தும்முவது உள்ளிட்ட செயல்பாடுகள் செய்து காட்டப்பட்டது. இதனையடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் மேற்கண்ட செயல்பாடுகளை பல்வேறு பகுதி பொதுமக்களுக்கும் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதேபோல் வெள்ளியணை அமராவதி கலை, அறிவியல் கல்லூரியில், நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெள்ளியணை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர் களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com