கொரோனா தொற்று இன்னும் உச்சம் தொடவில்லை: உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் உச்ச நிலையை தொடவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக கூறி உள்ளது.
Published on

ஜெனீவா,

சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. ஆனாலும் நாம் இன்னும் அந்த தொற்று நோயின் உச்சத்தை தொடவில்லை.

உலகளவில் இறப்பு சமப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது. உண்மையிலேயே சில நாடுகளில் இறப்பு எண்ணிக்கையை குறைப்பதில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் கடந்த வார இறுதி நாட்களில் உலகளவில் 4 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. உலகமெங்கும் 1 கோடியே 11 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பதிவாகி உள்ளது. 5.35 லட்சம் பேர் இறப்பும் பதிவாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று மிகவும் ஆபத்தானது என்று இந்த தொற்றுநோயின் ஆரம்ப காலத்தில் இருந்து, நீண்ட காலமாக கூறி வருகிறோம். ஆரம்பத்தில் இருந்தே இதை நமது முதல் பொது எதிரி என்று கூறினோம்.

இது இரண்டு ஆபத்தான சேர்க்கைகளை கொண்டிருக்கிறது. ஒன்று, வேகமாக பரவுகிறது. மற்றொன்று, இது ஆட்கொல்லி. எனவேதான் நாங்கள் கவலை கொண்டோம். உலகத்தை தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.

கொரோனா வைரஸ் தொற்று மனித குலத்துக்கு எதிரி. இதில் மனிதகுலம் ஒற்றுமையாக நின்று போரிட்டு, தோற்கடிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட தொற்று நோய், நூற்றாண்டில் ஒரு முறை வருகிறது. இது ஆபத்தான வைரஸ். 1918-ம் ஆண்டுக்கு பின்னர் (ஸ்பானிஷ் புளூ வெளிப்பட்ட பின்னர்) இது போன்று ஒரு வைரஸ் வெளிப்பட்டது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால பிரிவு தலைவர் டாக்டர் மைக்கேல் ரேயானும் நிருபர்களிடம் பேசினார். அவர், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற உயிர்ப்பலிகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம் என எச்சரித்தார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, ஜூன் மாதத்தில் நாம் பார்த்தது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்புதான். அத்துடன் இன்னும் வேகம் எடுக்காதது, உயிர்ப்பலிகள்தான். அதற்கு இன்னும் காலம் எடுக்கும். இதில் சில பின்னடைவுகள் இருக்கலாம். பலி எண்ணிக்கை உயரப்போவதை இனி நாம் காண முடியும் என குறிப்பிட்டார்.

மேலும், கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் பாதிப்பு அதிரடியாக கூடிக்கொண்டே வருகிறது. ஆனால் பலி எண்ணிக்கை மே மாதம் முதல் ஸ்திரமாக உள்ளது. பலி எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் கொரோனா நோயாளிகளை நிர்வகிக்க கற்றுக்கொண்டு விட்டனர். இதுதான் உயிர்ப்பலி குறைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com