கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக கலெக்டர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

திருவள்ளூரில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது:-

சீனாவில் உகான் நகரத்தில் இருந்து பரவிய இந்த கொரோனா வைரஸ் நோய், விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உடலில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி, உடல் சோர்வு ஒரு சிலருக்கு மூச்சு திணறல் ஆகியவை இந்த நோயின் அறிகுறியாகும்.

இந்த நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர் திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்போது கைகள், வாயிலாக பரவுகிறது. எனவே, தினமும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும், கிருமி நாசினி கொண்டு சுத்தமாகக் துடைத்து பராமரித்தல் வேண்டும். சளி மற்றும் இருமல், காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள டாக்டரிடம் அணுக வேண்டும்.

கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இருமல் சளியால் பாதிக்கப்பட்டு காய்ச்சல் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோயினால் யாருக்கும் பாதிக்கப்படவில்லை. மேலும் விவரங்களுக்கு 24 மணி நேர உதவி எண் 044 -27666746 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கொரோனா வைரஸ் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஸ்ரீவர்ஸ்சவ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) தயாசாந்தி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள் ஜவகர்லால், பிரபாகரன், காச நோய் துணை இயக்குனர் டாக்டர் லட்சுமி முரளி மற்றும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com