கட்டுமானப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் கட்டிட அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

கட்டுமானப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கட்டிட அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
Published on

தஞ்சாவூர்,

மூவேந்தர் அனைத்து கட்டிட மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மே தின விழா மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ரகுபதி, பொருளாளர் முத்துக்கிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் கருப்பையா, மாவட்ட செயலாளர் முத்தையா ஆகியோர் வரவேற்றனர்.

கூட்டத்தில் தொழிலாளர்களின் குழந்தைகள் 5 பேருக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.1000 வழங்கப்பட்டது. அதே போல் விளையாட்டில் சாதனை படைத்து வரும் விக்னேஷ், திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்த மாணவி காயத்திரி ஆகியோருக்கும் தலா ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டது.

கூட்டத்தில், கட்டுமான தொழிலை காப்பாற்ற கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். தட்டுப்பாடு இன்றி குறைந்த விலையில் மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கல்வி நிதிகள் உரிய காலத்திலும், ஓய்வூதியங்களுக்கு மாதந்தோறும் வழங்கிட அரசு ஆவன செய்ய வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

இயற்கை மரணத்துக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனையும் வீடு கட்ட மானியத்துடன் கூடிய கடனும் வழங்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடி தொழிலை செய்வதற்கு கச்சத்தீவை மீட்க வேண்டும். மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதைப்போல, கட்டுமான தொழிலாளர்களுக்கு மழைகாலத்தில் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மூவேந்தர் அனைத்து கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க நிறுவனர் கனகராஜ், ஆலோசகர்கள் பாலசுந்தரம், வைத்தியநாதன் கட்டிட பொறியாளர்கள் மற்றும் எழில் கலைஞர்கள் சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் சிவப்பிரகாசம், பொருளாளர் சங்கர், அகில இந்திய பொறியாளர்கள் கழக தலைவர் சுமதி பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முடிவில் தலைமை நிலைய பேச்சாளர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com