நடப்பு 2018-19 சந்தை பருவத்தில் பருத்தி உற்பத்தி 7.87 சதவீதம் சரிந்து 3.43 கோடி பொதிகளாக குறையும் : இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு மதிப்பீடு

சீனா, வங்காளதேசம், வியட்நாம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நமது முக்கிய பருத்தி ஏற்றுமதி சந்தைகளாக உள்ளன. இப்பருவத்தில் பருத்தி ஏற்றுமதி சுமார் 32 சதவீதம் சரிவடைந்து 47 லட்சம் பொதிகளாக குறையும் என பருத்தி சங்கம் எதிர்பார்க்கிறது...
Published on

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

நடப்பு சந்தை பருவத்தில் (2018 அக்டோபர்-2019 செப்டம்பர்) நாட்டின் பருத்தி உற்பத்தி 7.87 சதவீதம் சரிந்து 3.43 கோடி பொதிகளாக குறையும் என இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. இது 12 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்தியா 2-வது இடம்

சர்வதேச பருத்தி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் பருத்தியை மூலப்பொருளாகக் கொண்டு பல்வேறு தயாரிப்புகளை அளிப்பதிலும் நம் நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்திய ஜவுளி மற்றும் பருத்தி துறைகள் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.

நம் நாட்டில் ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் பருத்தி உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன. நம் நாட்டில் பருத்தி சந்தை பருவம் என்பது அக்டோபரில் தொடங்கி செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. அமெரிக்காவில் இப்பருவம் ஆகஸ்டு மாதத்தில் தொடங்கி ஜூலை மாதத்தில் முடிகிறது. இதன்படி அமெரிக்க வேளாண் துறை இந்தியாவின் பருத்தி உற்பத்தி, ஏற்றுமதி குறித்த மதிப்பீடுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

3.61 கோடி பொதிகள்

உள்நாட்டில், நடப்பு பருவத்தில் 3.61 கோடி பொதிகள் பருத்தி உற்பத்தியாகும் (ஒரு பொதி என்பது 170 கிலோ பருத்தியை கொண்டது) என பருத்தி ஆலோசனை வாரியம் கூறி இருந்தது. கடந்த 2017-18 பருவத்தை விட இது சுமார் 2 சதவீதம் குறைவாகும். அப்போது உற்பத்தி 3.65 கோடி பொதிகளாக இருந்தது. ஆனால் இந்திய பருத்தி சங்கம் பருத்தி உற்பத்தி 11 சதவீதத்திற்கு மேல் சரிவடைந்து 3.28 கோடி பொதிகளாக குறையும் என முன்னறிவிப்பு செய்துள்ளது.

இந்நிலையில், நடப்பு பருவத்தில் பருத்தி உற்பத்தி 3.43 கோடி பொதிகளாக குறையும் இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு மதிப்பீடு செய்து இருக்கிறது. இது கடந்த பருவத்தின் செய்த உற்பத்தியை விட 7.87 சதவீதம் குறைவாகும். அப்போது உற்பத்தி 3.70 கோடி பொதிகளாக இருந்தது.

மழை நிலவரம்

பல விவசாயிகள் அதிக லாபம் தரக்கூடிய பயிர்களுக்கு மாறி வருவதால், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பருத்தி உற்பத்தி மதிப்பீடுகள் திருப்திகரமாக இல்லை. மேலும் மழை நிலவரம் திருப்திகரமாக இல்லாததாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உற்பத்தி மதிப்பீட்டில் பருத்தி சங்கம் மாற்றம் செய்து இருக்கிறது.

பருத்தி உற்பத்தி சரிவடைந்தால் அது ஏற்றுமதியையும் பாதிக்கும். எனவே இறக்குமதி அதிகரிக்கும் நிலை ஏற்படும். இப்பருவத்தில் பருத்தி இறக்குமதி 60 முதல் 80 சதவீதம் வரை அதிகரித்து 25-27 லட்சம் பொதிகளாக உயரும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். கடந்த பருவத்தில் (2017 அக்டோபர்-2018 செப்டம்பர்) இறக்குமதி 15 லட்சம் பொதிகளாக இருந்தது.

ஏற்றுமதி சரிவடையும்

சீனா, வங்காளதேசம், வியட்நாம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நமது முக்கிய பருத்தி ஏற்றுமதி சந்தைகளாக உள்ளன. இப்பருவத்தில் பருத்தி ஏற்றுமதி சுமார் 32 சதவீதம் சரிவடைந்து 47 லட்சம் பொதிகளாக குறையும் என பருத்தி சங்கம் எதிர்பார்க்கிறது. கடந்த பருவத்தில் அது 69 லட்சம் பொதிகளாக இருந்தது.

பருத்தி சங்கத்தின் மதிப்பீடுகளின்படி, உள்நாட்டில், நடப்பு பருவத்தில் பருத்தி பயன்பாடு 3.16 கோடி பொதிகளாகவும், (பருவத்தின் இறுதியில்) பருத்தி கையிருப்பு 13 லட்சம் பொதிகளாக இருக்கும். பருவத்தின் தொடக்கத்தில் அது 28 லட்சம் பொதிகளாக இருந்தது.

நாட்டின் மொத்த ஆடைகள் ஏற்றுமதியில் பருத்தி ஆடைகளின் பங்கு ஏறக்குறைய 70 சதவீதமாக உள்ளது. இந்திய உற்பத்தி துறையில் ஜவுளித்துறையின் பங்கு 10 சதவீதமாக இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 13 சதவீதமாகவும் இத்துறையின் பங்கு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com