கொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் நாடாளுமன்ற தேர்தல்

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியாவில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் நாடாளுமன்ற தேர்தல்
Published on

ஜாக்ரெப்,

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியாவில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இந்த கொடிய வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அந்த நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அந்த நாட்டில் வாக்குரிமை பெற்ற 30 லட்சத்து 85 ஆயிரம் பேருக்காக நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

கொரோனா பீதிக்கு மத்தியிலும் மக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக அதிகாலை முதலே வாக்குச்சாவடியில் குவிந்தனர். அவர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் தங்களது வாக்கை செலுத்தினர்.

மொத்தமுள்ள 151 இடங்களுக்கு 100க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எனினும் ஆளும் பழமைவாத குரோஷிய ஜனநாயக கூட்டமைப்பு கட்சிக்கும், சமூக ஜனநாயகவாதிகள் கட்சிக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளின் படி சமூக ஜனநாயகவாதிகள் கட்சிக்கு 56 இடங்களும், குரோஷிய ஜனநாயக கூட்டமைப்பு கட்சிக்கு 55 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com