கூடலூர் - முதுமலை எல்லையோர கிராமங்களில், வயல்களில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்

கூடலூர்-முதுமலை எல்லையோர கிராமங்களில் வயல்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி வனச்சரகரிடம் விவசாயிகள் முறையீடு செய்தனர்.
Published on

கூடலூர்,

கூடலூர் பகுதியில் தொடர் மழைக்காலம் நிறைவு அடைந்துள்ளது. தற்போது கடும் பனிப்பொலிவும், வெயிலும் காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் பசுமையாக காட்சி அளித்த வனம் பனிப்பொலிவால் காய்ந்து வருகிறது. இதனால் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட தொடங்கி உள்ளது. இதன் காரணமாக காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி முதுமலை எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

முதுமலை புலிகள் காப்பக எல்லையோரத்தில் கூடலூர் நகராட்சி, ஸ்ரீமதுரை ஊராட்சி மற்றும் சுற்று பகுதியில் உள்ள கிராமங்களில் பருவமழைக்காலம் தொடங்கும் சமயத்தில் நாட்டு ரக நெல் நாற்றுக்களை விவசாயிகள் பயிரிட்டு பராமரித்தனர். தற்போது நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி வயலுக்குள் புகுந்து நெற்பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீமதுரை ஊராட்சி நரிக்கொல்லி பகுதியில் காட்டு யானைகள் நுழைந்து கிருஷ்ணன் என்பவரது வயலுக்குள் புகுந்து நெற்பயிர்களை தின்று நாசம் செய்தது. இதேபோல் முளப்பள்ளி பகுதியை சேர்ந்த பரமசிவன் என்பவரது வயலுக்குள் காட்டு யானைகள் இறங்கி நெற்பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த ஸ்ரீமதுரை விவசாயிகள் நேற்று முன்தினம் முதுமலை வனச்சரகர் சிவக்குமாரை நேரில் சந்தித்து காட்டு யானைகள் அட்டகாசம் குறித்து முறையீடு செய்தனர். மேலும் குனில்வயல் பகுதியில் அடிக்கடி நுழைந்து கால்நடைகளை கொன்று வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக மனுவும் அளித்தனர்.

மனுவை பெற்ற வனச்சரகர் சிவக்குமார், காட்டு யானைகள் வருகையை தடுக்க இன்னும் சில தினங்களில் முதுமலை எல்லையோரம் அகழி தோண்டும் பணி தொடங்கப்பட உள்ளது. அதன்பின்னர் காட்டு யானைகள் வருகை கட்டுப்படுத்தப்படும். மேலும் சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். புலி கடித்து கொன்ற கால்நடைகளுக்கான இழப்பீடு 10 நாட்களில் வழங்கப்படும். புலியை கூண்டு வைத்து பிடிக்க வன உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

இங்கு பல தலைமுறைகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றோம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக வனவிலங்குகள் ஊருக்குள் வந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. சேதம் அடையும் பயிர்களுக்கு ஏற்ப வனத்துறையும் இழப்பீடு வழங்குவது இல்லை. ஏற்கனவே விவசாயத்தால் போதிய வருவாய் கிடைப்பது இல்லை. தற்போது வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com