ஊரடங்கால் தனியார் பள்ளி முதல்வர் தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை நடத்தும் அவலம்

தெலுங்கானாவில் ஊரடங்கு உத்தரவால் தனியார் பள்ளி முதல்வர் தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை நடத்தும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவின் கம்மம் பகுதியில் வசித்து வருபவர் ராம்பாபு மரகானி. இவர் தனியார் பள்ளியொன்றின் முதல்வராக இருந்து வந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பினை எதிர்கொள்ள ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவர்கள் வருகையில்லை. பள்ளிகளுக்கு கட்டணமும் செலுத்தப்படவில்லை. இதனால் வேலையின்றி போன ராம்பாபு அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நின்றார். ஆனால் சோர்ந்து விடாமல், சிற்றுண்டி கடை ஒன்றை நடத்துவது என முடிவு செய்துள்ளார். இதற்கு இடம், அனுமதி உள்ளிட்ட போதிய வசதி இல்லாத சூழலில், சாலையோரம் தள்ளுவண்டி ஒன்றில் தனது கடையை திறந்துள்ளார். இவர் தனது மனைவியையும் உதவிக்கு வைத்துள்ளார்.

இதில், தோசை, இட்லி, வடை உள்ளிட்ட தென்னிந்திய டிபன் வகைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். கொரோனா பாதிப்பு எதிரொலியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் முடங்கின. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் கூட குறைந்த ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.

ஊரடங்கு உத்தரவால், பலரது வேலை பறிபோயுள்ளது. பலருக்கு வருவாய் இல்லை. ஒரு சிலர் குறைந்த ஊதியம் பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் வேலைவாய்ப்பின்மையை பலர் சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் இதுபற்றி கூறிய ராம்பாபு, யாரையும் நீங்கள் சார்ந்திருக்க வேண்டாம். உங்களது சொந்த காலில் நீங்கள் நில்லுங்கள் என நம்பிக்கையூட்டும் வகையில் கூறியுள்ளார். வேலை பறிபோன நிலையில், வருவாயை ஈட்டுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com