

வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் கஞ்சா மற்றும் போதை பொருள் அடிக்கடி கடத்தி செல்லப்படுகிறது. இதை தடுக்க கடலோர காவல் குழும போலீசார் கடற்கரையோரங்களில் தீவிரமாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 24-ந்தேதி நாகையை அடுத்த வேளாங்கண்ணி அருகே செருதூர் கடலில் மிதந்து வந்த மரப்பெட்டியை கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி பார்த்த போது அதில் ஹெராயின் என்ற போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து திருச்சியில் இருந்து வந்த சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஹெராயின் பொட்டலங்களை கடலோர காவல் குழும போலீசார் ஒப்படைத்தனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் இந்த ஹெராயின் பொட்டலங்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? அதன் மதிப்பு குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரை ஒதுங்கிய மரப்பெட்டி
இந்த நிலையில் வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரன் இருப்பு வடக்கு சல்லிக்குளம் கடற்கரை பகுதியில் நேற்று காலை ஒரு மரப் பெட்டி கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் குழும அதிகாரி ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெட்டியை கைப்பற்றி திறந்து பார்த்தனர். இந்த பெட்டி பழங்காலத்து ஐந்தரை பெட்டி போல் 12 அறைகள் இருந்தது. இதில் 11 அறைகளில் வெள்ளைநிற பவுடர் பொட்டலங்கள் இருந்தன. ஒரு அறையில் 2 கிலோ பொட்டலங்கள் வீதம் மொத்தம் 11 அறைகளில் 22 கிலோ பவுடர் இருந்தது.
ஹெராயினா?
இதை போலீசார் கைப்பற்றி நாகைக்கு எடுத்து சென்று சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கரை ஒதுங்கிய வெள்ளைநிற பவுடர் ஹெராயினா என அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். நாகை மாவட்ட பகுதியில் அடிக்கடி மரப்பெட்டிகள் கரை ஒதுங்கி வருவதால் கடற்கரை பகுதியில் எங்காவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.