

குளித்தலை,
ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் நீர்நிலைகளில் உள்ள பகுதிகளில் திரளும் பொதுமக்கள் புனிதநீராடி தங்களது மறைந்த முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி நேற்று தை அமாவாசையையொட்டி குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் குளித்தலை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் குவிந்தனர்.
பின்னர் காவிரி ஆற்றில் புனிதநீராடி, ஆங்காங்கே அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் சென்று இறந்த தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும். தங்களுக்கு எல்லா நன்மைகளையும் அவர்கள் செய்யவேண்டும் என்று வேண்டி தங்களது முன்னோர்களுக்கு பிண்டங்கள் வைத்து தர்ப்பணம் செய்தனர். பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட பிண்டங்களை காவிரி ஆற்றில் கரைத்து பின்னர் புனிதநீராடினர். இதையடுத்து கடம்பவனேசுவரர் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டு சென்றனர். மேலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் குளித்தலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நொய்யல் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் தை அமாவாசையையொட்டி ஏராளமான பொதுமக்கள் கூடினர். பின்னர் காவிரி ஆற்றில் புனிதநீராடி, தங்களது முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
இதேபோல வேலாயுதம்பாளையம் மலைவீதியில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் தை அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிகப்பு பட்டு அணிவித்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல காகித ஆலை பேரூராட்சி டி.என்.பி.எல் குடியிருப்பில் உள்ள வல்லபை கணபதி கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மன், நாணப்பரப்பு மாரியம்மன், மண்மங்கலம் புதுகாளியம்மன் ஆகிய கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.