பவானிசாகர்,
பவானிசாகர் அருகே உள்ள புங்கார் ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக் தலைமை தாங்கினார். பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரி மைதிலி முன்னிலை வகித்து பேசினார். அப்போது பொதுமக்கள் திடீரென கூட்டத்தை புறக்கணித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறுகையில், பவானிசாகர் அணையின் முன்புறம் பவானி ஆற்றின் குறுக்கே புஞ்சைபுளியம்பட்டிபண்ணாரி சாலையில் பாலம் உள்ளது. அணை கட்டுவதற்கு முன்பு கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்காக பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்ட இப்பாலம் ஓட்டை விழுந்து பழுதடைந்தது.
இதனால் பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக புங்கார், பெரியார் நகர், காராச்சிக்கொரை, புதுபீர்கடவு, கொத்தமங்கலம், சுஜில்குட்டை, தெங்குமரஹடா, கல்லம்பாளையம், அல்லிமாயாறு உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தற்போது கிராம மக்கள் சத்தியமங்கலத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் பள்ளி, கல்லூரிகள் செல்ல சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். பழுதடைந்த பாலத்தை புதுப்பித்து கட்டித்தர கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாலத்தை நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் பாலத்தின் தூண்கள் உறுதியாக இருப்பதால் மேல்பகுதியில் உள்ள கான்கிரீட் தளத்தை இடித்துவிட்டு புதிதாக அமைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர். ஆனால் இதற்கான நிதி ஒதுக்கபடாததால் பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை. எனவே உடனடியாக பழுதடைந்து காணப்படும் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்றனர்.
அதற்கு தாசில்தார் கார்த்திக் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தது குறித்து தீர்மானத்தில் பதிவு செய்யப்பட்டது.