இலங்கை தமிழர்களை விடுவிக்கக்கோரி திருச்சி மத்திய சிறையை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை - 70 பேர் கைது

சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்கக்கோரி திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை தமிழர்களை விடுவிக்கக்கோரி திருச்சி மத்திய சிறையை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை - 70 பேர் கைது
Published on

திருச்சி,

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வந்தவர்கள், விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கி இருந்தவர்கள், கடத்தல் வழக்கில் சிக்கியவர்கள் என 70-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் இலங்கை தமிழர்கள், வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள், பல்கேரிய நாட்டினர் உள்ளிட்டோர் உள்ளனர். அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைத்தும் நிர்வாகம் அனுப்பாமல் வைத்திருப்பதாகவும், உறவினர்களை பார்க்க முடியாமல் தவிப்பதாகவும் கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு முகாம் வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.

சிலர், அதிக அளவில் தூக்க மாத்திரை தின்று தற் கொலைக்கும் முயன்றனர். இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு வங்காள தேசத்தை சேர்ந்த 7 பேர், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பாமல் சித்ரவதை செய்வதாக கூறியும், அவர்களை விடுவித்து இலங்கைக்கு அனுப்ப கோரியும், திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்திய சிறையை நாம் தமிழர் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமை தாங்கினார்.

இதில் அக்கட்சியை சேர்ந்த திலீபன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டு, இலங்கை தமிழர்களை விடுதலை செய்து சொந்த நாட்டுக்கு அனுப்பக்கோரி கோஷம் எழுப்பினார்கள். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை கே.கே.நகர் போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com