தஞ்சையில் மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆர்ப்பாட்டம் அரசு மருத்துவமனைகளில் பணி வழங்க கோரிக்கை

அரசு மருத்துவமனைகளில் பணி வழங்க கோரி தஞ்சையில் மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயிலடியில் தமிழ்நாடு டயாலிசிஸ் டெக்னீசியன் (தொழில்நுட்ப வல்லுனர்) நல சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் நல சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தலைமை தாங்கினார்.

இதில் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் நல சங்க செயலாளர் சாந்தி, தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் காளிதாசன், டயாலிசிஸ் டெக்னீசியன்கள் நல சங்க மாநில தலைவர் செந்தில் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், 2005-ம் ஆண்டு முதல் தற்போது வரை 3,500-க்கும் மேற்பட்ட டயாலிசிஸ் டெக்னீசியன்கள், அரசு கல்லூரிகளில் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசு தவறிவிட்டது. இதனால் அவர்கள் பெரும்பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே டயாலிசிஸ் டெக்னீசியன்களுக்கு பணி வழங்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் 6 பேர் மட்டுமே நிரந்தர டயாலிசிஸ் டெக்னீசியன்களாக பணியில் உள்ளனர். நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மருத்துவமனை களில் பணியமர்த்தும் டெக்னீசியன்களை மதிப்பெண் சதவீத அடிப்படையில் தேர்வு செய்யாமல் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீசியன்கள் இல்லாமலேயே டயாலிசிஸ் மையங்கள் செயல்படுகின்றன.

இந்த மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் மையங்கள் பொதுமக்கள் நலன் கருதி 24 மணிநேரமும் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com