ஊட்டி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவர் நினைவு தினம் அனுசரிப்பு கல்லறையில் மலர் வளையம் வைத்து கலெக்டர் அஞ்சலி

ஊட்டி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது கல்லறையில் மலர் வளையம் வைத்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அஞ்சலி செலுத்தினார்.
Published on

ஊட்டி,

கடந்த 1848-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மெக்ஐவர் என்பவர், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சேரிங்கிராசில் பூங்கா அமைப்பதற்கான வேலைகளை தொடங்கினார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து கடும் சிரமத்துக்கு இடையே கப்பல்கள் மூலம் அரிய வகை மரக்கன்றுகள், நாற்றுகளை கொண்டு வந்து நடவு செய்தார். பின்னர் கடந்த 1867-ம் ஆண்டு பூங்கா பணிகள் முடிவடைந்தது. 19 ஆண்டுகள் அயராமல் உழைத்து மெக்ஐவர் பூங்காவை உருவாக்கினார். அது காலப்போக்கில் தோட்டக்கலை பூங்காவாக மாற்றப்பட்டது. தற்போது தமிழக அரசின் தோட்டக்கலைத்துறையின் கீழ் தாவரவியல் பூங்காவாக செயல்பட்டு வருகிறது.

நினைவு தினம்

இந்த பூங்கா சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். இந்த பூங்காவை உருவாக்கிய மெக்ஐவர் கடந்த 8.6.1876-ந் தேதியன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடல் புனித ஸ்டீபன் ஆலய கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை சார்பில் மெக்ஐவரின் 144-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அஞ்சலி

நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு மெக்ஐவரின் கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். ஸ்டீபன் ஆலய பங்கு குரு அருட்திலகம், மெக்ஐவரின் வரலாறு மற்றும் செயல்பாடுகளை விவரித்து சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதில் கலந்துகொண்ட நீலகிரி ஆவணக்காப்பக இயக்குனர் வேணுகோபால் கூறும்போது, நீலகிரியை கண்டறிந்த ஜான் சல்லீவன் சிலை கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் அமைக்கப்பட்டது. அதேபோல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உருவாக முழு காரணமாக இருந்த மெக்ஐவரின் மார்பளவு சிலையை பூங்காவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com