திருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் இருந்த இடத்தை பார்வையிட பக்தர்கள் ஆர்வம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்கப்புதையல் இருந்த இடத்தை பார்வையிட பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே பாதுகாப்பு கருதி அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
Published on

திருச்சி,

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் வளாகத்தில் நந்தவனம் அமைப்பதற்காக மண் தோண்டப்பட்ட போது, தங்கப்புதையல் சிக்கியது. அதில் 505 தங்கக்காசுகள் மொத்தம் ஒரு கிலோ 716 கிராம் எடை அளவில் இருந்தன. அதனை வருவாய்த்துறை அதிகாரிகள் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் பழமை வாய்ந்த தங்க நாணயங்களை தமிழக அரசின் தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் பார்வையிட்டனர். மேலும் தங்கப்புதையல் இருந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டனர். அந்த தங்க காசுகள் 18-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களது ஆட்சியில் வெளியிடப்பட்டவை என தெரிந்தது. புதையல் இருந்த இடத்தில் கம்பிவேலி அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நந்தவனம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கோவில் வளாகத்தில் புதையல் இருந்த இடத்தை பார்வையிட பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த இடத்தின் அருகே சென்று பார்வையிடுகின்றனர். ஆனால் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் பக்தர்கள் யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

மத்திய தொல்லியல் துறை

இதற்கிடையில் பழங்கால தங்கநாணயங்களை பார்வையிட மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் வர இருப்பதாக கூறப்படுகிறது. தஞ்சாவூரில் மத்திய தொல்லியல் துறையின் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கிருந்து அதிகாரிகள் நாளை (திங்கட்கிழமை) வரலாம் என வருவாய்த்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். கோவில் வளாகத்தில் வேறெங்கும் தங்கப்புதையல் இருக் குமா? என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com