

கன்னியாகுமரி,
இந்துக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு பலிகர்மம் செய்ய உகந்த நாளாக ஆடி அமாவாசை கருதப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக தை அமாவாசை இருந்து வருகிறது. இந்த நாளில் இந்துக்கள் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் புனித நீராடி தங்கள் முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை நிறைவேற்றுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தை அமாவாசை நேற்று வந்தது. இதையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலை 4 மணிக்கே பக்தர்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து வேத விற்பனர்கள் மந்திரங்கள் சொல்ல தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை நடத்தினர்.
தொடர்ந்து வாழை இலையில் பூக்கள், தர்ப்பைப்புல், அரிசி உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்தனர். மீண்டும் நீராடிய பக்தர்கள், பரசுராமர், விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலில் வழிபட்டனர்.
தை அமாவாசையை முன்னிட்டு பகவதி அம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பகவதி அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் நடை மதியம் 12.30 மணிக்கு அடைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
இரவு 8 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலாவும், முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய விசேஷ நாட்களில் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் வழியாக அம்மன் பிரவேசித்தார். பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனை எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் ராமச்சந்திரன், தலைமை கணக்கர் ராமச்சந்திரன், முன்னாள் கணக்கர் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.