ஆடி அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்

ஆடி அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். மேலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்
Published on

ஸ்ரீரங்கம்,

மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் இந்துக்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஒவ்வொரு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் தை, ஆடி அமாவாசை தினங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுப்பதுண்டு. தை, ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆன்மா சாந்தியடைவதோம், அவர்களது ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த நிலையில் ஆடி அமாவாசையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் பக்தர்கள் புனித நீராட நேற்று அதிகாலை முதல் குவிந்தனர். காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிக அளவில் இல்லை. ஆற்றின் நடுப்பகுதியில் ஓடை போல சிறிதளவு மட்டும் தண்ணீர் ஓடுகிறது. இதனால் மணற்பரப்பில் பக்தர்கள் நடந்து ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று புனித நீராடினர்.

அம்மா மண்டபம் படித்துறை கரையில் புரோகிதர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்டவர்களை அமர வைத்து தர்ப்பண சடங்குகளை புரோகிதர்கள் செய்தனர். வாழை இலையில் தேங்காய், பழம், அரிசி, எள் உள்ளிட்டவைகளை வைத்தும், பழத்தில் பிண்டம் பிடித்து வைத்து அதற்கு பூஜை செய்து முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

அதன்பின் பிண்டங்களை தனியாக தட்டில் எடுத்து சென்று ஆற்றில் விட்டு கரைத்து பக்தர்கள் வழிபட்டனர். கருடமண்டபம் படித்துறையில் ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்டவர்களை அமர வைத்து ஒரே ஒரு புரோகிதர் மட்டும் தர்ப்பண சடங்குகளை செய்தார். இதனால் அந்த படித்துறை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி ஆற்றின் மணற்பரப்பிலும் புரோகிதர்கள் அமர்ந்து தர்ப்பணத்திற்கான மந்திரங்களை ஓதி சடங்குகளை செய்தனர். கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சில புரோகிதர்கள் குடையை பிடித்தவாறும், துணியால் மேற்கூரை போன்று கட்டி அதன் நிழலிலும் அமர்ந்திருந்தனர்.

அமாவாசையானது நேற்று பகல் 11.24 மணிக்கு தொடங்கியதால் அந்த நேரத்தை கணக்கிட்டு அதன்பிறகு ஏராளமானோர் வந்தனர். காவிரி ஆற்றில் கடந்த ஆண்டு இரு புறமும் கரையை தொட்டபடி தண்ணீர் அதிக அளவில் சென்றது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவே ஓடுகிறது. காவிரி ஆறு வறண்டு மணற்பரப்பாக காட்சியளித்ததை கண்டு பக்தர்கள் கவலை அடைத்தனர்.

அம்மா மண்டபம் படித் துறையை போல ஓயாமரி படித்துறை, கம்பரசம்பேட்டை படித்துறை, கீதாபுரம் படித்துறை உள்ளிட்ட காவிரி ஆற்று படித்துறைகளில் பக்தர்கள் புனிதநீராடி வழிபாடு நடத்தினர். மேலும் இறந்த தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப் பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசையையொட்டி அம்மா மண்டபம் படித்துறையில் ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல மாநகராட்சி சார்பிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடுவதால் பக்தர்கள் புனித நீராட வசதியாக குழாய்கள் மூலம் ஷவர் வசதி செய்யப்பட்டிருந்தது. அதில் சில பயணிகள் புனித நீராடினர்.

ஆடி அமாவாசையொட்டி தேங்காய், பழம், கற்பூரம், அகத்தி கீரை, வாழை இலை உள்பட பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது. மாம்பழச்சாலையில் இருந்து அம்மாமண்டபம் சென்ற வாகனங்கள் வீரேஸ் வரம் வழியாக திருப்பிவிடப்பட்டன. இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் மாம்பழச்சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். அமாவாசையையொட்டி தரைக்கடைகள் மற்றும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என மாநகராட்சி உதவி ஆணையர் வைத்தியநாதன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் டேவிட் மருதராஜா, திருப்பதி மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் ஆய்வு நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் 10 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com