தனுஷ்கோடி கடலில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளியல் - எச்சரிக்கை பலகைகள் வைக்க வலியுறுத்தல்

தனுஷ்கோடி கடலில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளிப்பதால் எச்சரிக்கைண பலகைகள் வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி இயற்கையாகவே கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் நீரோட்டம் உள்ள கடல் பகுதியாகும். அதனால் பாதுகாப்பு கருதி தனுஷ்கோடி கடலில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல ஊர்களில் இருந்தும் தினமும் கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட பல வாகனங்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்கள் கடலை பார்த்த ஆர்வத்தில் அதில் இறங்கி குளிக்க தொடங்கி விடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா வந்த கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பலர் தடையை மீறி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் இறங்கி குளித்த போது அதில் ஒரு மாணவர் கடல் அலையில் சிக்கி கடலில் மூழ்கி போனார். இதுவரை அவரை பற்றிய எந்த தகவலும் இல்லாததுடன் உடலும் கரை ஒதுங்கவில்லை.

இந்தநிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என எந்த ஒரு இடத்திலும் எச்சரிக்கை மற்றும் அறிவிப்பு பலகைகள் இல்லை. இதனால் அரிச்சல்முனை வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்து பற்றிய விவரம் தெரியாமல் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர்.

அது போல் நேற்றும் அரிச்சல் முனை வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குழந்தைகளுடன் கடலில் இறங்கி ஆபத்தை அறியாமல் தடையை மீறி குளித்தனர்.

பல பேர் உயிரிழந்துள்ள நிலையிலும், சுற்றுலா பயணிகள் தடையை மீறி கடலில் இறங்கி குளிப்பது தொடர்கின்றது.

ஆகவே இதுகுறித்து அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில், தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் கடலில் எந்த இடத்திலும் இறங்கி குளிக்க வேண்டாம் என எழுதப்பட்ட பெரிய அளவிலான எச்சரிக்கை பலகைகளை பல இடங்களில் வைப்பதற்கு கடலோர போலீசாரும், நகராட்சி நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் தாங்களாகவே முன் வந்து கடலில் இறங்கி குளிக்காமல் இருந்தால் மட்டுமே உயிர்ப்பலி ஏற்படுவதை நிரந்தரமாக தடுக்க முடியும் என்பதை உணர வேண்டும், சுற்றுலா பயணிகளும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com