தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. 2-வது நாளாக நேற்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கிருஷ்ணகிரியில் நேற்று மாலை சூறைகாற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மழைநீர் சாலையில் கரைபுரண்டு ஓடியது. இந்த மழையால் சுமார் 1 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. வேப்பனப்பள்ளியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மாலையில் பலத்த காற்று வீசியது. பின்னர் ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. இந்த ஆலங்கட்டி மழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன. சில இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல சூளகிரி, சின்னார், மேலுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக்காற்று பலமாக வீசியதில் மேலுமலையில் சில வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைகள் பறந்தன. வீடுகளில் இருந்த பாத்திரங்களும் காற்றில் தூக்கி வீசப்பட்டன.

சில இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. இதேபோல், ஓசூரிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சிறிது நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. ஓசூர் அருகே குடிசெட்லு கிராமத்தில், பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக அப்பகுதியில் விவசாயிகள் அமைத்திருந்த பசுமைக்குடில்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று சூறைக்காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

பென்னாகரம் பகுதியில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. பல இடங்களில் மழைநீரில் கழிவுபொருட்கள் அடித்து செல்லப்பட்டு சாக்கடை கால்வாய்க்குள் சென்றதால் நகரில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடியது. இதனால் சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது.

இந்த சூறைக்காற்றுக்கு தாளப்பள்ளம், நாகதாசம்பட்டி பகுதிகளில் புளிய மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்து விழுந்தன. இதன்காரணமாக பென்னாகரம்-தர்மபுரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சாலையில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.

பிக்கம்பட்டி கிராமத்தில் 5 இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மின்வாரிய அலுவலர்கள் மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com