பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த 7 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிப்பு - மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த 7 நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
Published on

திருப்பூர்,

திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களை போல் சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இவை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத்தான் செயல்பட வேண்டும். ஆனால் அனுமதியின்றியும், முறைகேடாகவும் இயங்கி இந்த சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது மருத்துவ கழிவுகளை கையாளும் மருந்தகங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத்தான் செயல்பட வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அனுமதி பெறாத இந்த மருந்தகங்களின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதற்கிடையே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த 7 நிறுவனங்களின் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சண்முகம் கூறியதாவது:-

திருப்பூரில் முறைகேடாக இயங்கி வரும் சாய, சலவை ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் மழைவெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் ஆய்வு மேற்கொண்டோம்.

இவ்வாறாக ஆய்வு தீவிரமாக பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே பல்லடம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சில நிறுவனங்களில் தயாரிக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பல்லடம், பொங்கலூர், சித்தம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது 7 நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த 7 நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமிக்கு பரிந்துரை செய்தோம். அதன்பேரில் கலெக்டர் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த 7 நிறுவனங்களின் மின் இணைப்பும் துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com