பணம் கொடுத்து வாக்குகளை வாங்க நினைக்கும் தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் வாலாஜாவில் அன்புமணி ராமதாஸ் பேட்டி

பணம் கொடுத்து வாக்குகளை வாங்க நினைக்கும் தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வாலாஜாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
Published on

வாலாஜா,

வேலூர் மாவட்டம், வாலாஜா அருகே தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. கூட்டணியின் முக்கிய நிர்வாகிகளை பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்புமணி ராமதாசை, தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. உள்படகூட்டணி கட்சியினர் வரவேற்றனர்.

பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் ஆதரவாளர்கள் வீட்டில் மூட்டை, மூட்டையாக பல கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமானவரி சோதனையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எந்தெந்த தெருவிற்கு எந்தெந்த வார்டுக்கு என கவர்களில் குறிப்பிட்டு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பணம் வேலூர் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு வழங்க பதுக்கிய பணம் என செய்தி வந்துள்ளது. இது பற்றி மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் பதில் கூறியே ஆக வேண்டும். ரூ.10 லட்சம் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும், அது கட்சி பணம் என துரைமுருகன் கூறியுள்ளார். தற்போது தான் தெரிகிறது அது ரூ.10 கோடி என்று. ஸ்டாலின் இதற்கு பதில் கூறுவாரா? தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் பணத்தை கொடுத்து வாக்குகளை பெறும் கேவலமான செயலை செய்ய திட்டமிட்டுள்ளது.

காட்பாடி பகுதியில் சமீபத்தில் தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் வீட்டில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். மக்கள் இதனை பார்த்து கொண்டிருக்கின்றனர். ஏதோ உத்தமன் போன்று ஸ்டாலின் பேசி வருகிறார். இதில் இருந்து தெரிகிறது இவர்கள் தேர்தலில் பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்க திட்டமிட்டுள்ளனர். எதை செய்தாலும் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். எங்கள் கூட்டணிக்கு தான் வாக்களிப்பார்கள்.

பணம் கொடுத்து வாக்குகளை வாங்க நினைக்கும் தி.மு.க.வினரை தேர்தல் ஆணையம் போட்டியிடவிடாமல் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அடுத்து துரைமுருகன் வீட்டில் நாங்கள் தான் பணத்தை வைத்தோம் என்று கூட ஸ்டாலின் கூறுவார்.

வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை அபகரித்ததாக ஸ்டாலின் கூறுகிறார். அதனை யாரும் விற்கவோ, வாங்கவோ முடியாது. இந்த அடிப்படை கூட தெரியவில்லை. அவர் ஒரு கட்சியின் தலைவர். 100 சதவீதம் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. இரண்டாம் இடம் பிடித்தது, தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதே நிலை தான் தற்போதும் நடைபெறவுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் மத்திய மந்திரி ஆர்.வேலு, பா.ம.க. நிர்வாகிகள் எம்.கே.முரளி, இளவழகன், சரவணன் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com