தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் முன்னிலை

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் 66,155 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் முன்னிலை
Published on

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி), சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாசும், தி.மு.க. சார்பில் செந்தில்குமாரும், அ.ம.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், மக்கள் நீதிமய்யம் சார்பில் ராஜசேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் ருக்மணிதேவி உள்ளிட்ட 15 பேர் போட்டியிட்டனர்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்ட 8 வாக்குச்சாவடிகளில் பல்வேறு புகார்கள் காரணமாக கடந்த 19-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் பதிவான மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்கள் தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தி.மு.க. வேட்பாளர் முன்னிலை

இந்தநிலையில் நாடாளுமன்ற மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் மலர்விழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் ஓட்டு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் வீதம் போடப்பட்டு இருந்தது. தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டது.

பாலக்கோடு தொகுதியில் 19 சுற்றுகளும், பென்னாகரம் தொகுதியில் 21 சுற்றுகளும், தர்மபுரி தொகுதியில் 22 சுற்றுகளும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 23 சுற்றுகளும், அரூர்(தனி) தொகுதியில் 22 சுற்றுகளும், மேட்டூர் தொகுதியில் 23 சுற்றுகளுமாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதல் 6-வது சுற்று வரை பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை பெற்றார். அதன்பின்னர் 7-வது சுற்று முதல் தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 20-வது சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் 66,155 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான 10 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் அதில் உள்ள வாக்குகளை எண்ணும் பணி காலதாமதம் ஆனது. இதனால் கடைசி 3 சுற்று வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெற்றது.

1. செந்தில்குமார் (தி.மு.க.)- 4,92,049

2. அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.)- 4,22,894

3. பழனியப்பன் (அ.ம.மு.க.)-45,860

4, ராஜசேகர் (மக்கள் நீதிமய்யம்) - 14,056

5ருக்மணிதேவி (நாம்தமிழர் கட்சி) 17, 554

நோட்டா

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 20-வது சுற்று வரை நோட்டாவுக்கு 12,167 ஓட்டுகள் பதிவாகியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com