தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க கூட்டம்: மாநில உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது மனுஷ்ய புத்திரன் பேச்சு

தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க கூட்டத்தில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது என கவிஞர் மனுஷ்ய புத்திரன் பேசினார்.
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி வடக்கு மாநில தி.மு.க. சார்பில், தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க கூட்டம் வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது. தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வரவேற்றார்.

கூட்டத்திற்கு அவைத் தலைவர் பலராமன் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் குமார் என்கிற கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் மனுஷ்ய புத்திரன், பேச்சாளர் குடியாத்தம் அன்பு, புதுச்சேரி வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் மனுஷ்ய புத்திரன் பேசியதாவது:-

தி.மு.க. பொதுக்குழுவில் மாநில சுயாட்சி, சமத்துவம் உள்ளிட்டவைகள் முக்கிய தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்த பாதையில் தி.மு.க. பயணிப்பதை உறுதிபடுத்தி உள்ளது.

இந்தியாவின் 3-வது பெரிய கட்சியாக தி.மு.க. திகழ்கிறது. தி.மு.க.வை தீயசக்திகள் அழிக்க நினைக்கிறார்கள். தி.மு.க.வில் கொள்கை, சமூக நீதியின் வாரிசு அரசியல் தொடர்கிறது.

நாம் போராடி பெற்ற மாநில உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. அ.தி.மு.க. அடுத்தடுத்து ஊழல் செய்தும் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு அ.தி.மு.க. அடிமையாக இருந்தால் மட்டும் போதும். மோடி, அமித்ஷா ஆகியோரின் காலடியில் ஒட்டு மொத்த இந்தியாவை வைக்க முயற்சி நடக்கிறது.

இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இதற்கு முக்கிய காரணமாக பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற தவறான பொருளாதார கொள்கையே காரணம். இ்தனால் மக்கள் வருமானம் இல்லாமல் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் சமூக நீதிக்கான போர். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எஸ்.பி.சிவக்குமார் பேசியதாவது:-

கட்சியை பலப்படுத்த தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதனை நாம் ஒற்றுமையாக இணைந்து பணியாற்ற வேண்டும்.

என்.ஆர். காங்கிரஸ் கோட்டையாக இருந்த தட்டாஞ்சாவடி தொகுதியை கைப்பற்றி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. அதையடுத்து காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு தி.மு.க. உறுதுணையாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பொருளாளர் செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர் லோகையன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோகுல், பழனி, பிரபாகரன், ரவீந்திரன், சத்தியா ஆறுமுகம் உள்பட பல்வேறு அணி தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் காமராஜ் நகர் தொகுதி சிவக்குமார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com