மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி - உதயநிதி ஸ்டாலின் பேட்டி

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
Published on

சென்னை,

தி.மு.க. இளைஞரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தலைவர் பிறந்தநாள் தங்கக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

சென்னையில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அமைப்பாளர்களிடம், கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பாக விண்ணப்ப பாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாமல், அனைவரும் பங்கேற்கும் வகையில் 10 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.

இதில் கலந்துகொள்ள விரும்பும் அணிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு கட்டணம் ரூ.1,000 ஆகும். இம்மாதம் 25-ந் தேதி பதிவு செய்துகொள்ள கடைசி நாளாகும். இந்த போட்டியானது வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகள், மண்டல அளவிலான போட்டிகளில் மோத வேண்டும். அந்த வகையில், தமிழகத்தை 4 மண்டலமாக பிரித்து, அதாவது சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மண்டலங்களாக போட்டிகள் நடத்தப்படும். மண்டல அளவிலான போட்டிகளில் 15, 16 அணிகள் இடம்பெறும். மார்ச் 1-ந் தேதி போட்டிகள் தொடங்கி, மார்ச் மாதம் கடைசியில் இறுதி போட்டி நடத்தப்படும்.

முதல் பரிசாக ரூ.5 லட்சமும், 2-வது பரிசாக ரூ.4 லட்சமும், 3-வது பரிசாக ரூ.3 லட்சமும், 4-வது பரிசாக ரூ.2 லட்சமும் வழங்கப்படும். இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாண்டு, ஆட்ட நாயகன் விருது பெறுபவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com