வாக்குப்பதிவு செய்வதில் தி.மு.க-அ.தி.மு.க.வினர் இடையே தள்ளு-முள்ளு திருவெண்காடு அருகே பரபரப்பு

திருவெண்காடு அருகே தி.மு.க- அ.தி.மு.க.வினர் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Published on

திருவெண்காடு,

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெண்காடு, பூம்புகார், சீர்காழி, ஆக்கூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர். பூம்புகார், வானகிரி, மடத்துகுப்பம், திருமுல்லைவாசல் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் காலையில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மதியத்திற்கு மேல் விறு, விறுப்பாக காணப்பட்டது.

நேற்று மேற்கண்ட மீனவ கிராமங்களில் திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடந்ததால் காலையில் வாக்களிக்க யாரும் வரவில்லை. இதனால் நேற்று மதியத்திற்கு மேல் வாக்களிக்க வாக்காளர்கள் வந்தனர்.

மேலும், திருவெண்காடு அருகே மணிக்கிராமம் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்வதில் தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரியா மற்றும் போலீசார் மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று இரு கட்சியினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து கட்சியினர் கலைந்து சென்றனர். இதனால் அந்த வாக்குச்சாவடி மையத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. மேலும் திருவெண்காடு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதானது. இதனை அதிகாரிகள் உடனடியாக சரி செய்தனர். இதனால் சுமார் 15 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com