விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தை குறை கூறுவதா? காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி பாய்ச்சல் “ஏ.சி. அறைகளில் இருப்பவர்களுக்கு ரூ.6 ஆயிரத்தின் மகத்துவம் புரியாது”

விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தை குறை கூறும் காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார். “ஏ.சி. அறையில் இருப்பவர்களுக்கு, ஏழை விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கிடைப்பதின் மகத்துவம் புரியாது” என்று கூறினார்.
விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தை குறை கூறுவதா? காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி பாய்ச்சல் “ஏ.சி. அறைகளில் இருப்பவர்களுக்கு ரூ.6 ஆயிரத்தின் மகத்துவம் புரியாது”
Published on

லே,

பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று ஒரு நாள் பயணம் மேற்கொண்டார்.

இதற்காக மைனஸ் 19 டிகிரி என்ற அளவில் கடும் குளிர் நிலவிய லே நகருக்கு வந்து சேர்ந்தபோது அவரை மாநில கவர்னர் சத்யபால் மாலிக், அவரது ஆலோசகர்கள், உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்த விழாவில் லடாக் பல்கலைக்கழகத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். விமான நிலைய புதிய முனையத்துக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். லடாக்கில் பயணிகளுக்கும், மலையேறுபவர்களுக்குமான சிறப்பு வழித்தடங்களையும் அவர் திறந்துவைத்தார்.

ரூ.2 ஆயிரம் கோடியில் அமைந்துள்ள லே-கார்கில் நீர் மின்திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் மத்திய பட்ஜெட்டில் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்து இருப்பதை குறை சொல்லும் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக, கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:-

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறோம். இந்த திட்டத்தின் கீழ், லே, லடாக் பகுதிகளும் பலன் அடையும். 3 தவணைகளாக இந்த தொகை வழங்கப்படும். முதல் தவணை விரைவில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விடும். மாநில அரசுகளுக்கு இது குறித்த வழிமுறைகள் அனுப்பப்படுகின்றன.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம், தனித்துவம் வாய்ந்த ஒரு திட்டம் ஆகும்.

டெல்லியில் ஏ.சி. அறைகளில் இருந்து கொண்டிருப்பவர்களுக்கு, நாட்டின் தொலைவிடங்களில், கடினமான பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இந்த 6 ஆயிரம் ரூபாய் தொகை எவ்வளவு முக்கியம் என்பது தெரியாது.

இதற்கு முன்பு இங்கு நான் வந்து அடிக்கல் நாட்டிய திட்டப்பணிகளை இப்போது தொடங்கி வைத்துள்ளேன். இதேபோன்று இன்று (நேற்று) நான் அடிக்கல் நாட்டுகிற திட்டப்பணிகளை தொடங்கிவைப்பதற்காக மீண்டும் இங்கு வருவேன்.

நமது வேலை பார்க்கும் கலாசாரம் மாறுபட்டது. நமது நாட்டின் பின்னே தாமதமாக வேலை பார்க்கும் கலாசாரமும், பிற்போக்கான கலாசாரமும் விடப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த கலாசாரத்தை ஒழிப்பதற்கு நான் வரப்போகிறேன்.

இங்கே அடிக்கல் நாட்டப்பட்ட திட்டப்பணிகள் உரிய காலத்தில் செய்து முடிக்கப்பட்டு விடும் என்ற வாக்குறுதியை உங்களுக்கு தருகிறேன்.

இங்கு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு 5 மலையேறும் தடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பயணம் மேற்கொள்வதற்கான கால அளவை 7 நாட்களில் இருந்து 15 நாட்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. 3 லட்சம் சுற்றுலாப்பயணிகள் இந்த பகுதிக்கு வந்துள்ளனர். ஒரு லட்சம் பேர் கார்கில் சென்றுள்ளனர். காஷ்மீருக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளில் பாதிப்பேர் இங்கு வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

விஜய்பூரில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை, செனாப் பகுதியில் பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், அங்கு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்குள்ள மக்களை பாதுகாப்பதற்காக ஜம்முவில் எல்லைப்பகுதியில் 14 ஆயிரம் பதுங்கு குழிகள் அமைப்போம். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் அரசு மிகவும் உறுதியுடன் உள்ளது.

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பொய் சொல்கிறது. முன்னாள் ராணுவத்தினர் நலன்களைப் பற்றி பெரிதாக பேசுகிற காங்கிரஸ் கட்சி, இதற்காக ஒதுக்கியது வெறும் 500 கோடி ரூபாய் தான். ஆனால் எங்கள் அரசு ரூ.35 ஆயிரம் கோடிக்கு அதிகமாக ஒதுக்கி உள்ளது. இதில் நிலுவைத்தொகை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.11 ஆயிரம் கோடியும் அடங்கும்.

நாட்டில் உள்ள மக்களுக்கு ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் கொண்டு வந்தோம். இதை எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தன. ஆனால் இந்த வங்கி கணக்குகள், விவசாயிகளுக்கு இப்போது ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் உதவியாக இருக்கும்.

இந்த திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறோம். அடுத்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.7 லட்சம் கோடி போய்ச் சேரப்போகிறது என்பதே இதன் அர்த்தம்.

சுமார் 5 ஏக்கர் நிலத்துக்கு குறைவாக வைத்துள்ள நாட்டின் 90 சதவீத விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் இலக்கு.

2008-2009-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி, ரூ.6 லட்சம் கோடி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யப்போவதாக கூறியது. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது, ரூ.52 ஆயிரம் கோடி கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களில் 30-35 லட்சம் பேர், அந்த தள்ளுபடியை பெறுவதற்கு தகுதி இல்லாதவர்கள் என்று தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் கடன் தள்ளுபடி திட்டத்தில் 70-80 சதவீத ஏழை விவசாயிகளை காங்கிரஸ் கட்சி விட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com