தேசிய மருத்துவ கமிஷனை எதிர்த்து நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம் - நோயாளிகள் அவதி

தேசிய மருத்துவ கமிஷனை எதிர்த்து நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
Published on

ஐதராபாத்,

மருத்துவக்கல்லூரிகளை கண்காணிக்கும் அமைப்பான இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ கமிஷனை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் மத்திய அரசு அதற்கான மசோதாவை மக்களவையில் கடந்த 29-ந்தேதி தாக்கல் செய்து நிறைவேற்றியது.

இதைத்தொடர்ந்து 24 மணிநேர வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தெலுங்கானா

தெலுங்கானா மாநிலத்தில் 16 ஆயிரம் டாக்டர்கள் மற்றும் 10 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அந்த மாநில மருத்துவ சங்க செயலாளர் சஞ்சீவ் சிங் யாதவ் கூறுகையில், ஒரு சில தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தவிர, மற்றவர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு வழக்கம்போல சிகிச்சை அளிக்கப்பட்டது. தேசிய மருத்துவ கமிஷன் மூலம் தகுதியற்ற நபர்கள் டாக்டர் ஆக வாய்ப்புள்ளதாகவும், இது மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றார்.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்திலும் இதே நிலையே ஏற்பட்டது. அங்குள்ள மால்டா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மூடப்பட்டது. இதனால் சிகிச்சை பெறுவதற்காக வந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

சில ஆஸ்பத்திரிகளில் பயிற்சி டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மராட்டியம்

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் கோட்டத்தில் உள்ள 8 மாவட்டங்களில் பணிபுரியும் 4 ஆயிரம் டாக்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். பல இடங்களில் மருத்துவ சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல் இயங்கியது.

நாடு முழுவதும் நடந்த இந்த போராட்டத்தால் அனைத்து மாநிலங்களிலும் புறநோயாளிகள் புறக்கணிக்கப்பட்டனர். இதனால் சிகிச்சை பெறுவதற்காக வந்த அவர்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com