நாய்கள் தொல்லை
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் மற்றும் புறநகர் ரெயில் நிலையங்களில் ஏராளமான நாய்கள் அங்கும் இங்கும் சுற்றித்திரிகின்றன. தெருக்களிலும், சாலைகளிலும் மட்டுமே சுற்றித்திரிந்த நாய்கள் தற்போது ரெயில் நிலையங்களிலும் சர்வ சாதாரணமாக உலா வந்து பயணிகளுக்கு தொல்லை கொடுத்து வருகின்றன. இதனால் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளுடன் செல்லும்போது நாய்கள் பின்தொடர்ந்து அவர்களை அச்சுறுத்தி வருவதாகவும், ரெயில் நிலையங்களில் அமர்ந்து உணவு உண்ணும்போதும் நாய்கள் அருகே வந்து கடிக்க வருவதுபோல் பாய்வதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பயணிகளை அச்சுறுத்துகிறது
எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் அமர்ந்திருக்கும் இடங்களில் நாய்கள் அங்கும் இங்கும் வலம் வருவது மட்டுமில்லாமல், முககவசம் அணிந்து வருபவர்களை துரத்தும்விதமாக அச்சுறுத்தி வருகிறது. இரவு நேரங்களில் வெளியே உள்ள நாய்களும் ரெயில் நிலைய வளாகத்துக்குள் வந்து அங்குள்ள பயணிகளை பயமுறுத்துகின்றன.
இதுகுறித்து எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூறும்போது, இங்கு 6-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. சில நாய்கள் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்கிறது. உணவு பொட்டலங்களை பிரித்தவுடன் அருகே வந்து நின்று விடுகின்றன. இதனால் நாய் கடித்துவிடுமோ? என்ற பயத்திலேயே இருக்கவேண்டியது உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதற்கு ரெயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.