

சென்னை,
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள பழமைவாய்ந்த திருக்கோவில்களின் நிர்வாகத்தை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள பல கோவில்களின் பராமரிப்பும், நிர்வாகமும் மத்திய தொல்லியல்துறைக்கு மாற்றப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் செயல் ஆகும்.
தமிழக கோவில்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை மத்திய தொல்லியல்துறைக்கு மாற்ற வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட கோவில்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சி என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. அப்பட்டமான இந்த கலாசார படையெடுப்பை அனுமதிக்க முடியாது.
வழிபாட்டில் உள்ள கோவில்களை தொல்லியல்துறையிடம் ஒப்படைப்பது, அக்கோவிலை மூடுவதற்கு ஒப்பானதாகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை உயிரும், உணர்வும் மிக்க வழிபாட்டு தலங்களாக திகழும் கோவில்கள், தொல்லியல்துறை கட்டுப்பாட்டுக்கு சென்றவுடன் உயிரும், உணர்வும் அற்ற புராதன சின்னங்களாக மாறிவிடும். இது தடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள கோவில்களை கையகப்படுத்தும் திட்டம் தொல்லியல்துறைக்கு இருந்தால், அதை கைவிட வேண்டும். இதை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.