நெடுங்குன்றம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

நெடுங்குன்றம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Published on

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சியில் ஆலப்பாக்கம், கொளப்பாக்கம், புத்தூர், சதானந்த புரம், நெடுங்குன்றம், மப்பேடு கிராமங்கள் உள்ளன. சென்னை புறநகரான தாம்பரம் அருகே உள்ளதால் இந்த பகுதிகள் கடந்த சில ஆண்டுகளில் படுவேகமாக வளர்ந்து வருகிறது.

இந்த பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பருவமழை பொய்த்ததால் இந்த கிராமங்களில் உள்ள கிணறுகள் வறண்டு விட்டன. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுமக்கள் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கடும் கோடை காலத்திலும் 50 முதல் 100 அடி ஆழத்திலேயே நிலத்தடிநீர் கிடைத்து வந்தது. தற்போது கடும் வறட்சி காரணமாக 100 முதல் 500 அடி வரை போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் கூட தண்ணீர் இன்றி வறண்டு உள்ளன. பெரும்பாலான வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றியதால் பொது மக்கள் குடிநீருக்கு கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே இந்த அவல நிலையை போக்கிட மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நெடுங்குன்றம் கிராமத்துக்கு போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சதானந்தபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டோம். புதிதாக ஆழ்துளைகிணறு அமைக்கவும் கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. வீடுகளில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் குறைந்துவிட்டதால் ஊராட்சி நிர்வாகம் வழங்கும் தண்ணீரை தான் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், தண்ணீர் வழங்கும் கிணறுகள் வற்றி விட்டன. தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தூர்ந்து போன பழைய நீர்நிலைகளை கண்டறிந்து சீரமைத்து வருகிறோம். புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com