குடிநீர் கம்பெனிகளை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

செங்குன்றம் அருகே குடிநீர் கம்பெனிகளை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published on

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் கம்பெனிகள் நடத்திவரும் தனியார் சிலர் ராட்சத ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, டேங்கர் லாரிகள் மற்றும் குடிநீர் கேன்கள் மூலம் சென்னையில் உள்ள வீடுகள், கடைகளுக்கு குடிநீர் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த குடிநீர் கம்பெனிகளில் சுமார் 500 அடிக்கும் மேல் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுவதால் அந்த பகுதியில் வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும், பஞ்சாயத்து ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் தங்கள் பகுதியில் செயல்படும் குடிநீர் கம்பெனிகளை மூடக்கோரி நேற்று இரவு 8 மணியளவில் கே.கே.நகர் காவல் உதவி மையம் அருகே செங்குன்றம்-திருவள்ளூர் சாலையில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்து வந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கம்பெனிகளை மூட நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

அதை ஏற்று 9 மணியளவில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

* காசிமேடு மீன்பிடி துறைமுக புதிய வார்ப்பு பகுதியில் உள்ள ஹேமலதா (50) என்பவரது பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து சிகரெட், பீடி பண்டல்கள் மற்றும் ரூ.2 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

* தியாகராயநகர் பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பழைய குற்றவாளியான அமைந்தகரையை சேர்ந்த பாட்ஷா (20) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 20 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

*குரோம்பேட்டையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்த பல்லாவரம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மீது லாரி மோதிய விபத்தில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அனகாபுத்தூரை சேர்ந்த கலைவாணி (32) உயிரிழந்தார்.

*ஓட்டேரியில் குடும்பத் தகராறில் 2-வது மனைவி சுகன்யா (30) என்பவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய அரிபாபு (38) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com