புதுச்சேரி,
புதுவை முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நலத்திட்டங்கள் முடக்கம்
புதுவையில் ஆளும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசுக்கும், மத்திய பாரதீய ஜனதா அரசால் நியமிக்கப்பட்ட கவர்னருக்கும் இடையிலான அதிகாரப்போட்டி அப்பாவி பொதுமக்களை பாதித்து வருகிறது.
கவர்னரும், முதல்-அமைச்சரும் மக்கள் நலத்திட்டங்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று அ.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் ஆட்சியாளர்களும் கவர்னரும் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.
குடிநீர் சுத்திகரிப்பு
மத்திய அரசின் அம்ருத் என்ற நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பத்தில் 22 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும்போதே அதனை சுத்திகரிப்பு செய்யவும், மக்களுக்கு அதை நேரடியாக வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்த திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரியில் மேலும் 2 இடங்களும் தேர்வு செய்யப்பட்டது. 3 சுத்திகரிப்பு திட்டங்களுக்காக ரூ.16 கோடி திட்ட மதிப்பீடும் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்த டெண்டரும் விடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி சில தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த திட்டத்தை முடக்கும் செயலில் இறங்கியுள்ளார். இதனால் பொதுப்பணித்துறை நிர்வாகம் இந்த டெண்டரை கடந்த 18-ந்தேதி திடீரென ரத்து செய்துள்ளது.
முட்டுக்கட்டை
ஒரு திட்டத்தில் முறைகேடு நடந்தால் எந்த விசாரணையையும் நடத்தலாம். அதில் தவறில்லை. ஆனால் மக்களின் அத்தியாவசியமான, உயிர் பிரச்சினையான குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவதை ஏற்க முடியாது.
மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் விஷயத்தில் அரசும், கவர்னரும் அலட்சியம் காட்டக்கூடாது, உடனடியாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மக்களின் நீண்டநாள் கோரிக்கையை தீர்க்காவிட்டால் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.