அதிகாரிகள் வராததால் திருமக்கோட்டையில் கிராம சபை கூட்டம் ரத்து

அதிகாரிகள் வராததால் திருமக்கோட்டையில் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
Published on

திருமக்கோட்டை,

காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

இதில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் மனு அளிப்பதற்காக பல்வேறு கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள், சுய உதவிக்குழுவினர், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.

இந்த நிலையில் திடீரென மழை பெய்தது. இருந்தாலும் கிராம மக்கள் கலைந்து செல்லாமல் அதிகாரிகளுக்காக காத்திருந்தனர்.

ஆனால் வெகு நேரமாகியும் அதிகாரிகள் யாரும் கூட்டம் நடைபெற இருந்த அரசு பள்ளிக்கு வரவில்லை. இதனால் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வளர்ச்சி திட்டங்கள் குறித்த எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அதிகாரிகள் வராத காரணத்தால் கோரிக்கை மனு அளிக்க வந்த கிராம மக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com