மத்திய அரசின் தவறான கொள்கைகளால், திருப்பூரில் பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது - வெங்கடேசன் எம்.பி. பேச்சு

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் திருப்பூரில் பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்று வெங்கடேசன் எம்.பி. பேசினார்.
Published on

திருப்பூர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 102-வது புரட்சி தினத்தையொட்டி திருப்பூர்-அவினாசி ரோட்டில் உள்ள கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் இருந்து செந்தொண்டர் பேரணி நேற்று மாலை நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகோபால் தலைமை தாங்கி பேசினார். வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி வரவேற்று பேசினார். பேரணியை வெங்கடேசன் எம்.பி. கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்டக்குழு செயலாளர் முத்துக்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் மைதிலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி பி.என்.ரோடு, மில்லர் ஸ்டாப், லட்சுமிநகர், டி.எம்.எப். பாலம் வழியாக வந்து யுனிவர்செல் ரோடு ரவுண்டானா அருகே முடிவடைந்தது. பேரணியின் போது புரட்சி தின வரலாறு குறித்தும், கம்யூனிஸ்டு கட்சிகளின் கோரிக்கைகள் குறித்தும் கோஷமிட்டபடியும், அது தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடியும் ஏராளமானவர்கள் சென்றனர். அதைத்தொடர்ந்து யுனிவர்செல் ரோட்டில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் வெங்கடேசன் எம்.பி. பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் தற்போது நாடு முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் பின்னலாடை தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் கோவையில் ஏராளமான தொழில்கள் நலிவடைந்துள்ளன. பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கடந்த 6 மாதத்தில் 25 முதல் 30 சதவீத வீழ்ச்சியை அனைத்து நிறுவனங்களும் சந்தித்துள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்படும். கம்யூனிஸ்டுகளின் வரலாறுகளை மறைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com