கொரோனா ஊரடங்கு காலத்தில் 4 ஏழைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரி - ஐகோர்ட்டில் அரசு தகவல்

கொரோனா ஊரடங்கின் போது 4 ஏழைகளுக்கு மட்டுமே ஒரு ஆஸ்பத்திரி சிகிச்சை அளித்து உள்ளதாக ஐகோர்ட்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Published on

மும்பை,

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் தனியார் மருத்துவமனைகளில் 20 சதவீத படுக்கையை ஏழைகள் மற்றும் தேவைப்படுவோருக்கு ஒதுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. மேலும் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கொரோனா சிகிச்சை கட்டணத்தையும் நிர்ணயம் செய்தது.

இந்த நிலையில், பாந்திராவில் உள்ள ஒரு சீரமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடத்தில் வசித்து வரும் 7 பேர் அறக்கட்டளை நிர்வகித்து வரும் கே.ஜே. சோமையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக அவரிகளிடம் அந்த மருத்துவமனை மருத்துவ கட்டணமாக ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

பணத்தை செலுத்த தவறினால் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே செல்ல முடியாது என்று மருத்துவமனை நிர்வாகம் அச்சுறுத்தியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், அரசு உத்தரவுப்படி ஏழைகளான தங்களுக்கு மருத்துவமனை இலவசமாக சிகிச்சை அளித்திருக்க வேண்டும். எனவே தங்களிடம் மருத்துவமனை வசூலித்த ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை திருப்பி தர உத்தரவிட கோரி 7 பேரும் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

4 பேருக்கு மட்டுமே சிகிச்சை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.டி.தனுகா மற்றும் மாதவ் ஜம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி பதில் அளிக்கும்படி மாநில அறக்கட்டளை ஆணையருக்கு உத்தரவிட்டது.

அதன்பேரில் அறக்கட்டளை ஆணையர் விசாரணை நடத்தி ஐகோர்ட்டில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்தார். அதில், அரசு உத்தரவுப்படி அந்த ஆஸ்பத்திரி 20 சதவீத படுக்கையை ஏழைகளுக்காக ஒதுக்கிய போதிலும், ஊரடங்கு அமலுக்கு வந்த நாளில் இருந்து தற்போது வரை வெறும் 4 ஏழை நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளித்து உள்ளது. ஆயினும் எந்தவொரு நோயாளிக்கும் சிகிச்சை அளிக்க மறுத்ததாக அந்த மருத்துவமனை மீது புகார்கள் எதுவும் வரவில்லை. மனுதாரர்களில் 6 பேர் ஏப்ரல் 28-ந் தேதிக்கு முன்னரே சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். ஆனால் அரசு தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா சிகிச்சை கட்டணத்தை ஏப்ரல் 30-ந் தேதி நிர்ணயம் செய்தது. மே 21-ந் தேதி தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏழைகளுக்கு 20 சதவீத படுக்கைகளை ஒதுக்கி இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் விவேக் சுக்லா, அந்த மருத்துவமனை ஏழைகளுக்கு இலவச கொரோனா சிகிச்சை மற்றும் கொரோனா அல்லாத நோய்களுக்கு இலவச, குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக மாநில அரசு பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றவில்லை என்பது தெளிவாகியுள்ளது என்று கூறினார். இந்த வழக்கு விசாரணை மீண்டும் வருகிற 23-ந் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com