

கணினிப் பாதுகாப்பு முக்கியமானதாக உள்ள சூழ்நிலையில், பெரும்பாலானோர் எளிதாக கணிக்கக்கூடிய பாஸ்வேர்டையே வைத்திருப்பதாக ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
123456 என்பதுதான், பரவலாக பலராலும் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு என்று இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் ஆய்வு கூறுகிறது.
கணினி உலகில் மக்களைப் பாதிக்கும் ஆபத்து குறித்துத் தெரிந்துகொள்ள இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மூன்று வெவ்வேறான, ஆனால், ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய வார்த்தைகளைச் சேர்த்து வலிமையான பாஸ்வேர்டை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று தேசிய சைபர் பாதுகாப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.
வரம்புமீறி சில கணக்குகளுக்குள் உள்நுழைந்து தரவுகளை எடுத்து, எந்த எழுத்துகள் மற்றும் வாக்கியங்களை அந்த மக்கள் பாஸ்வேர்டாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது முதலில் ஆராயப்பட்டது.
அப்படி ஆராய்ந்தபோது, 2.3 கோடி பாஸ்வேர்டுகள் 123456 என்று இருந்தன. இரண்டாவது பிரபலமான பாஸ்வேர்டு 123456789. இதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கவில்லை. அடுத்த மூன்று இடங்களில், qwerty, password, 1111111 ஆகியவை இடம்பெற்றிருந்தன.
நன்கு தெரிந்த வார்த்தைகள் மற்றும் பெயர்களை பாஸ்வேர்டாக வைக்கும் மக்கள், தங்கள் கணக்குகளை ஹேக் செய்யும் ஆபத்தில் வைக்கிறார்கள் என்று இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் தொழில்நுட்ப இயக்குநர் இயன் லெவி கூறுகிறார்.
தங்களின் பெயர் அல்லது பிடித்த விளையாட்டு அணி போன்றவற்றை எல்லாம் யாரும் பாஸ்வேர்டாக வைக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பாதுகாப்பு பழக்கங்கள் மற்றும் அதுகுறித்த அச்சங்கள் குறித்தும் மக்களிடம் கேட்கப்பட்டது.
அதன்படி, ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழக்கக்கூடும் என்ற அச்சத்தில் 42 சதவீத மக்கள் இருக்கிறார்கள். 15 சதவீதம் பேர் மட்டுமே தங்களின் இணைய பாதுகாப்பு குறித்து நன்கு அறிந்து நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறுகின்றனர்.
வெகு சிலர் மட்டுமே தங்களது பிரதான மின்னஞ்சல் கணக்குக்கு, கண்டுபிடிக்க கடினமான பாஸ்வேர்டை பயன்படுத்துகின்றனர் என்பதும் தெரியவந்திருக்கிறது.
ஹேக் செய்யப்பட்ட கணக்குகளின் தரவுகளைப் பராமரிக்கும் பாதுகாப்பு வல்லுநர் டிராய் ஹன்ட் கூறுகையில், இணையப் பாதுகாப்புக்காக சிறந்த பாஸ்வேர்டை தேர்வு செய்து வைப்பது என்பது மக்களின் கையில் இருக்கும் மிகப் பெரிய பொறுப்பாக உள்ளது என்று கூறினார்.
கணினியின் திறவுகோலான பாஸ்வேர்டை பாதுகாப்பானதாக உருவாக்கிக்கொள்வதே நல்லது.