எழும்பூர் பிரபல லாட்ஜில் ரூ.50 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் துப்பாக்கி முனையில் வாலிபர் கைது

சென்னை எழும்பூரில் உள்ள பிரபல லாட்ஜில் ரூ.50 லட்சம் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த நோட்டுகளை மும்பையில் இருந்து கொண்டு வந்த தூத்துக்குடி வாலிபர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.
Published on

சென்னை,

சென்னை எழும்பூர் கென்னட் லேனில் உள்ள பிரபல லாட்ஜில் அறை எண் 304-ல் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுடன் வாலிபர் ஒருவர் தங்கி இருப்பதாக தலைமைச்செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

அந்த லாட்ஜில் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவர்களை பிடிக்க கூடுதல் கமிஷனர் மகேஷ் அகர்வால், இணை கமிஷனர் ஜெயகவுரி, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அங்கு மாறுவேடத்தில் சென்று லாட்ஜை சுற்றி வளைத்தனர். பின்னர் ஒரு போலீஸ்காரர் மட்டும் அந்த அறைக்கு சென்று கதவை தட்டினார். அங்கிருந்த வாலிபரிடம் தான் கள்ளநோட்டு வாங்க வந்திருப்பதாக தெரிவித்தார். அதற்கு அந்த வாலிபர் ரூ.5 லட்சம் பணம் தந்தால், ரூ.10 லட்சத்துக்கு கள்ள நோட்டுகள் தருவதாக தெரிவித்தார்.

அதற்கு போலீஸ்காரர் பணம் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். நீங்கள் பணத்துடன் கீழே நில்லுங்கள் நான் கள்ளநோட்டுகளை எடுத்து வருகிறேன் என அந்த வாலிபர் கூறினார். பின்னர் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் வந்தார். அவர் மாறுவேடத்தில் போலீசார் நின்றதை அறிந்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீசார் அவரை விரட்டிச்சென்று துப்பாக்கி முனையில் பிடித்தனர். பின்னர் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு ஒரு பையில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள் இருந்தது.

அதை எண்ணி பார்த்தபோது ரூ.40 லட்சம் இருந்தது. அந்த நோட்டுகளையும் அந்த வாலிபர் கையில் வைத்திருந்த ரூ.10 லட்சம் நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்த மலையரசன் என்பதும், மும்பையில் இருந்து கள்ளநோட்டுகள் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும், மும்பையில் இட்லிக்கடை நடத்தி வரும் மலையரசன், அங்கு தனது அக்காள் கணவருடன் சேர்ந்து கள்ளநோட்டுகள் மாற்றி வந்துள்ளார். அவரது அக்காள் கணவர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது. மலையரசன் மும்பையில் இருந்து கோயம்புத்தூரை சேர்ந்த தன்ராஜ் என்பவருடன் சேர்ந்து கள்ளநோட்டுகளை ரெயிலில் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மலையரசனை கைதுசெய்த போலீசார், கோயம்புத்தூர் சென்ற தன்ராஜை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். கள்ளநோட்டுகளை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கொண்டு வந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com