விஜயவாடா,
நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் நிலையில், ஆந்திராவில் மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்வதற்காக அரசு சார்பில் சிறப்பு கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. ரிது பஜார் என அழைக்கப்படும் இந்த கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்கு பொது சந்தைகளில் ரூ.150-க்கு விற்பனையாகிறது.
இந்த கடைகளுக்கு நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் நேற்று அதிகாலை முதலே இந்த கடைகளில் ஏராளமான மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வெங்காயத்தை வாங்கி சென்றனர்.
அந்தவகையில் கிருஷ்ணா மாவட்டத்தின் குடிவாடாவில் திறக்கப்பட்டு இருந்த ரிது பஜாரில் வெங்காயம் வாங்குவதற்காக சம்பையா (வயது 65) என்ற முதியவர் காலையில் வந்தார். அங்கு அவர் நீண்ட நேரம் வெங்காயத்துக்காக வரிசையில் காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் மயங்கி சரிந்த அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வெங்காயம் வாங்குவதற்காக காத்திருந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.