திருப்பூரில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி: இழப்பீடு வழங்கக்கோரி அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினாகள் சாலைமறியல்

திருப்பூரில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார். அவருக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி முன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பு ஏற்பட்டது.
Published on

திருப்பூர்,

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி (வயது 32). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10 வருடமாக திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி பாண்டியம்மாள் (28). இவர்களுக்கு அதர்சனா (6), தனிஷா (3) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மேஸ்திரி ஒருவர் மூலம் பல்லடம் ரோடு கணபதிபாளையம் பகுதியில் உள்ள லட்சுமி கார்டனில் ஒரு வீட்டில் நேற்று முன்தினம் ரவி டைல்ஸ் ஒட்ட சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ரவி மயங்கி விழுந்தார். இதனால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே ரவியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் மின்சாரம் தாக்கி பலியான ரவியை பார்க்க மேஸ்திரி மற்றும் வீட்டின் உரிமையாளர் யாரும் வரவில்லை. இரண்டு குழந்தைகள் உள்ளதால், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி ரவியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அரசு மருத்துவமனை முன்பாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி இழப்பீடு பெற்றுத்தருகிறோம் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் தாராபுரம் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com