அம்மாபேட்டை அருகே விவசாயியை யானை மிதித்து கொன்றது; மனைவி கண் முன்னே பரிதாபம்

அம்மாபேட்டை அருகே விவசாயியை யானை மிதித்து கொன்றது. மனைவி கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
Published on

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உள்பட்ட முரளியை அடுத்துள்ள கோணபுளியந்தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. அவருடைய மகன் செல்வம் என்கிற பொன்னுச்சாமி(வயது 46). விவசாயி.

இவருக்கு திருமணம் ஆகி ஐஸ்வர்யா (28) என்ற மனைவியும், சுஜீத்( 7) என்ற மகனும் உள்ளனர். சுஜீத் நெரிஞ்சிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

பொன்னுச்சாமிக்கு வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு கணவன், மனைவி இருவரும் விவசாயம் செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னுச்சாமி வழக்கம் போல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவு 12.30 மணி அளவில் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த விவசாயிகள் யானை, யானை என சத்தம் போட்டு உள்ளனர். சத்தம் கேட்டு பொன்னுச்சாமியும், ஐஸ்வர்யாவும் திடுக்கிட்டு எழுந்தனர்.

நாயும் குரைத்துக்கொண்டே இருந்தது. அப்போது பொன்னுச்சாமி வீட்டை விட்டு வெளியேவந்தார். பின்னால் ஐஸ்வர்யாவும் வந்து வாசற்படியில் நின்றிருந்தார். அவரது கணவர் வாசற்படியில் இருந்து சற்று தூரத்தில் வெளியே நின்று பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்குவந்த யானை துதிக்கையால் பிடித்து பொன்னுச்சாமியை கீழே தள்ளியது.

பின்னர் நெஞ்சு பகுதியில் காலால் மிதித்துவிட்டு அங்கிருந்து சென்றது. இதில் பொன்னுச்சாமி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மனைவியின் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. உடனே ஐஸ்வர்யா கணவரின் உடலை மடியில் வைத்து அலறி துடித்தார். அக்கம்பக்கத்து தோட்டத்தினரும் ஓடோடி வந்தனர். அப்போது மீண்டும் அங்கு யானை வந்தது. இதனால் மற்றவர்கள் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டனர்.

ஆனால் ஐஸ்வர்யா மட்டும் பயப்படாமல் அங்கேயே கணவரின் உடலை பார்த்து கதறி அழுதபடியே இருந்தார். யானை பொன்னுச்சாமியின் கால் பகுதியை தனது துதிக்கையால் தட்டிப்பார்த்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதன், சென்னம்பட்டி வனச்சரகர் செங்கோட்டையன், பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர், அந்தியூர் தாசில்தார் மாலதி மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

இதுபற்றி அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வனத்துறையினரிடம் கூறும்போது, பாதிக்கப்பட்ட பொன்னுச்சாமியின் மனைவிக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். வனத்தை ஒட்டியவாறு மின் அதிர்வு வேலிகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

வனவிலங்குகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிரை நாசம் செய்கிறது. மேலும் விவசாயிகளையும் கொன்று வருகிறது. இந்த பகுதியில் இதுவரை மொத்தம் 3 பேர் யானை மிதித்து உயிரிழந்துள்ளனர்.

தொடரும் இந்த சம்பவத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு முன்வர வேண்டும். விவசாய பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகளை சுட்டுத்தள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.

அதற்கு வனத்துறையினர் தங்களது கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றனர். பின்னர் போலீசார் பொன்னுச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com