ரூ.2 கோடியில் கட்டப்பட்ட அவசர சிகிச்சை- படுக்கை வசதி பிரிவு பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம்

திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவு, படுக்கை வசதிகள் பிரிவு கட்டப்பட்டுக்கு பல மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் பூட்டியே கிடக்கிறது.
Published on

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே கிரிவல பாதையில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையமானது கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி முதல் அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்பட்டு இயங்கி வருகிறது. ஆனால் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பழைய கட்டிடத்தில் உரிய வசதிகள் இன்றி 20 படுக்கைகளுடன் இயங்கி வருகிறது. 24 மணி நேர அரசு மருத்துவமனை என்ற போதிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு புற நோயாளிகள் மட்டும் சிகிச்சை பெற முடிகிறது.

மற்ற அரசு மருத்துவமனைபோல படுக்கை வசதி மற்றும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் தங்கி இருந்து சிகிச்சை பெற முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே பெரும்பாலான நோயாளிகள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலையே இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 55 லட்சத்தில் அவசர சிகிச்சைக்கான தனி சிறப்பு பிரிவு,விபத்து காயம் பிரிவு, குழந்தைகள் பிரிவு மற்றும் பெண்களுக்கான தனி பிரிவுகள் கட்டப்பட்டது. அது உடனடியாக பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மின் இணைப்பு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவு செயல்பாட்டுக்கு வராத நிலை தொடர்ந்தது.

இதற்கிடையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.1 கோடியே 50 லட்சத்தில் 40 படுக்கைகள், ரத்த வங்கி பிரிவு என்று கூடுதல் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகி விட்டது. ஆனால் பயன்பாட்டுக்கு வராத நிலையில் பூட்டிய நிலையில் காட்சிப்பொருளாக இருந்து வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறும்போது, புதிய மருத்துவமனை கட்டிடத்தின் நுழைவு வாயிலில் நோயாளிகள் வந்து செல்லுவதற்கு இடையூறாக உள்ள மின் கம்பம் அகற்றப்பட வேண்டும். அதற்காக மின் துறைக்கு முறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டது. மேலும் மின் கம்பத்தினை அகற்றி மாற்று இடத்தில் ஊன்றுவதற்கு மின் துறையினர் கேட்டு கொண்டதற்கு ஏற்ப கட்டணம் செலுத்தப் பட்டது. ஆனால் மின்கம்பத்தை அகற்ற மின் துறை அதிகாரிகள் முன்வரவில்லை. மின்கம்பம் அகற்றப்பட்டதும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் படுக்கை வசதிகள் பிரிவு கொண்ட புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தனர்.

அவசர சிகிச்சை பிரிவு கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களானபோது மின் இணைப்பு கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது படுக்கை வசதிகள் பிரிவு கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன போதிலும் இடையூறாக உள்ள மின் கம்பத்தை மாற்றுவதிலும் காலதாமதமாக்குவதிலும் மின்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது ஏன் என தெரியவில்லை. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com