வேலூர்,
வேலூர் மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையத்தை நேற்று முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்துக்கு உழைக்கும் பெண்கள்குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.குப்பு தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் சுசிலா, மாநிலக்குழு உறுப்பினர் செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர் மல்லிகா, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் பிரேமாவதி, செயலாளர் அமிர்தவள்ளி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
பணியிடங்களில் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், பாதுகாப்பற்ற தொழில்களில் இரவு பணியில் பெண்களை அமர்த்தக்கூடாது, சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும்.
முறைசாரா தொழிலாளர்கள் நலவாரிய பணப்பலன்களை இருமடங்காக உயர்த்தி காலதாமதமின்றி வழங்க வேண்டும், அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களுக்கான நிதியை குறைக்கக்கூடாது, பீடி, கைத்தறி போன்ற பாரம்பரிய தொழில்களை பாதுகாத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் பேசினர்.
பின்னர் தலைமை தபால் அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், முற்றுகையில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தனர். மொத்தம் 85 பெண்கள் உள்பட 100 பேர் கைதுசெய்யப்பட்டனர்.