அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கோவை மெயின் ரோட்டில் பெருமாள் கோவில் எதிரில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அவினாசி நேரு வீதியை சேர்ந்த கணேசன்(வயது 54) என்பவர் வங்கி அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வங்கி நேற்று காலை 10 மணி அளவில் வழக்கம் போல் செயல் பட்டது. கணேசனும் வங்கிக்கு வழக்கம் போல் வேலைக்கு சென்றார்.
காலை 10 மணியளவில் கனரா வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனைக்காக வந்திருந்தனர். இந்த நிலையில் வங்கியில் இருந்த ஒரு அறைக்கு சென்ற கணேசன் அதை உள்புறமாக தாழிட்டு கொண்டார்.
இதற்கிடையே காலை 10.30 மணியளவில் வங்கி அலுவலர்கள், கணேசன் இருந்த அறைக்கு சென்றனர். அந்த அறை கதவை தட்டி பார்த்தனர். அது திறக்கப்படவில்லை. உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதில் சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர் அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் உள்புறமாக பூட்டப்பட்டு இருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். அந்த அறையில் கணேசன் மின்விசிறியில் நைலான் கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதனால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வங்கி அலுவலர்கள், மேலாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த கணேசனின் உடலை பார்த்து அவரது மனைவி கற்பகம்(45) கதறி அழுதார். பின்னர் இது தொடர்பாக கற்பகம் அவினாசி போலீசில் புகார் செய்து உள்ளார். அந்த புகாரில் தனது கணவர் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசியில் வங்கிக்குள் பட்டப்பகலில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கியில் ஏதேனும் பிரச்சினை காரணமாக கணேசன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து போன கணே சனுக்கு 2 மகள்கள் உள்ளனர்.