இரும்புக்கு நிகரான மூங்கில்

உலகிலேயே மூங்கில் உற்பத்தியில் இந்தியா 2-வது இடம் வகிக்கிறது.
Published on

உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மூங்கில் பொருட்களை கட்டுமானத்திற்கு திறம்பட பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்திய கட்டுமானத் துறையில் மட்டும் மூங்கில்களின் பயன்பாடு இன்னும் அதிகம் உணரப்படவேயில்லை.

இந்தியாவில் 175 வகை மூங்கில்கள் வளர்கின்றன. இந்தியாவின் மொத்த மூங்கில் உற்பத்தியில் 20 சதவீத பங்கை வகிக்கும் மாநிலமாக மத்தியப்பிரதேசம் உள்ளது. வடகிழக்கு பிராந்தியத்தில் 28 சதவீத மூங்கில் மரங்கள் உள்ளன. இத்தனை மூங்கில் வளம் இருந்தும், வீடு கட்டுமானத் துறையினர் கான்கிரீட்டுக்கு நல்ல மாற்றாக இருக்கும் மூங்கிலைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கவே இல்லை.

பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருக்கும் நம் நாட்டில், குறைந்த விலையில் அவர்களுக்கு குடியிருப்புகளை கட்டுவதற்கான தேவை இருக்கும் சூழலில் மூங்கில் நல்ல கட்டுமானப் பொருளாக மாற வேண்டியது அவசியம். ஒரு வீடு கட்டுவதற்கு ஆகும் செலவில் 40 சதவீதத்தை மூங்கில் பொருளை பயன்படுத்துவதன் மூலம் குறைத்துவிட முடியும். அத்துடன் வீட்டின் ஆரோக்கியச் சூழலும் மூங்கில் பொருட்களால் மேம்படும். ஒரு மூங்கில் கம்பு உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் ஒருவரின் வாழ்நாள் முழுமைக்கும் தேவையானது.

மூங்கில்கள் லேசானவை. அதே வேளையில் இரும்புக்கு நிகரான வலுவும் கொண்டவை. நில அதிர்வு வாய்ப்புள்ள பகுதிகளில் வீடுகளைப் பாதுகாப்பாக கட்டுவதற்கு மூங்கில் சிறந்த கட்டுமானப் பொருளாக இருக்கிறது. ஏனெனில் நில அதிர்வு விபத்துகளில், மூங்கில் லேசாக இருப்பதால் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதே வேளையில் மூங்கிலின் தசைநார்கள் இரும்பை விட வலிமையானவை.

இரும்புக் கம்பிகளால் செறிவூட்டப்பட்ட கான்கிரீட்டுக்கு மாற்றாக தற்போது மூங்கில்களால் செறிவூட்டப்பட்ட கான்கிரீட் பல நாடுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகிறது. சுவர்கள், தூண்கள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தரைப்பூச்சுகளுக்கும் மூங்கில்கள் பயன்படுத்தப்படுகின்றன. காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் விசிறி பிளேடுகளைக் கூட மூங்கிலில் செய்கின்றனர். மூங்கில் பொருட்களினால் 2,500 பயன்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மூங்கிலை நாம் பயன்படுத்துவதில் பின்தங்கி இருக்கிறோம். வெள்ளையர்கள் மூங்கிலை ஏழைகளின் மரப் பொருள் என்று அழைத்தனர். அவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு நமது மரபான அறிவைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான உறுதியான கட்டிடங்களை நாம் கட்டியுள்ளோம். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மரத்தைப் பயன்படுத்தினால்தான் கட்டிடம் உறுதியாக இருக்கும் என்ற மனநிலையைக் கொண்டு வந்தனர்.

மூங்கில் இயற்கையாக மக்கி அழியக் கூடியது. அத்துடன் விவசாயிகள் பண்ணை அமைத்து, மூங்கில்களைப் பயிரிட்டு அறுவடை செய்வதற்கு உரிமங்களும் வழங்க வேண்டும். ஒரு மூங்கில் செடி, கட்டுமான தரத்திலான மூங்கிலைத் தருவதற்கு 4 வருடங்களில் தயாராகிவிடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com