ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா - திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்

ஈரோடு பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்.
Published on

ஈரோடு,

ஈரோடு கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் ரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. மேலும் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். கடந்த 2-ந்தேதி இரவு கோவிலில் கொடியேற்றப்பட்டது.

8-ந்தேதி பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கரும்புகள் (விறகுகள்) குண்டத்தில் அடுக்கி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். அதைத்தொடர்ந்து குண்டம் பற்றவைக்கப்பட்டது. நேற்று அதிகாலை கோவில் தலைமை பூசாரி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தார். அப்போது அவர் எலுமிச்சை, வாழைப்பழம், பூ ஆகிய பொருட்களை குண்டத்தில் வீசினார்.

இதைத்தொடர்ந்து தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் வரிசையாக தீ மிதிக்க தாடங்கினர். ஒருசில பக்தர்கள் அலகு குத்தியும், சிலர் குழந்தைகளை சுமந்து கொண்டும் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

ஈரோடு கள்ளுக்கடைமேடு, மரப்பாலம், சூரம்பட்டி, வெண்டிப்பாளையம், கொல்லம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்தனர். விழாவையொட்டி பத்ரகாளியம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com