நாகப்பட்டினம்,
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தாழை ம.சரவணனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
வேதாரண்யத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். மிகப்பெரிய ஜனநாயக நாட்டினை பாதுகாக்கின்ற தேர்தல். தேர்தல் நேரத்தில் அறிவிக்கின்ற அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய ஒரே கட்சி அ.தி.மு.க. தான்.
2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பினை வெளியிட்டது. அவ்வாறு வெளியிடப்பட்ட தீர்ப்பினை அரசிதழில் வெளியிட்டால் தான், அந்த தீர்ப்பு நடைமுறைக்கு வரும். மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தி.மு.க. அரசிதழில் வெளியிட எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாக 10 ஆண்டு காலம் நாம், நம்முடைய உரிமைக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஜெயலலிதா எடுத்த சட்டப்போராட்டத்தின் காரணமாக காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டரீதியாக போராடியதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 37 அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதின் காரணமாக மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர்முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க உத்தரவிட்டது. 50 ஆண்டு காலமாக நிலவி வந்த காவிரி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்ட அரசு, அ.தி. மு.க. அரசு.
டெல்டா விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திடும் வகையில் காவிரி - கோதாவரி இணைப்புத்திட்டத்தை நிச்சயமாக இந்த அரசு நிறைவேற்றித்தரும்.
சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை வெளிநாடுகளுக்கு சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கின்ற கால்நடைகளை பாதுகாத்திடும் வகையிலும், கால்நடைத்தொழில் செழிக்கின்ற வகையிலும் சேலத்திற்கு அருகில் 900 ஏக்கர் பரப்பளவில் கால்நடைப்பூங்கா அமைக்கப்படவுள்ளது.
இதன் மூலம் விவசாயிகள், தங்கள் தொழிலை திறம்பட மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளையும், நவீன தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்ளலாம். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக மாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கஜா புயல் ஏற்பட்டபோது, அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை அழைத்துச் சென்று, தங்க வைத்து, தேவையான உதவிகளை மேற்கொண்டதின் மூலமாக, பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்வதற்காக அனைத்து அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்பட்டது.
வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில் ரூ.100 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதே போன்று, ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. புஷ்பவனம், செம்பேடை, பெருந்தகையை இணைக்க ஒரு புதிய பாலம் அமைக்கப்படும். ஒரடியம்புல கிராமத்தில் ரூ.83 கோடி மதிப்பில் மீன்வளக் கல்லூரி அரசு கொடுத்திருக்கிறது. கீழ்வேளூர், அணைக்குடி பகுதியில் ரூ.15 கோடி மதிப்பில் கதவணை கட்டப்பட்டுள்ளது. தலைஞாயிறுவை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் கோவில் நிலங்களில் நீண்ட நாட்களாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது.
அரிச்சந்திரா நதியில் புதிய கதவணை கட்டப்படும். தொட்டியார் பட்டினத்தில் ரூ.2 கோடி மதிப்பில் அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்படும். வேதாரண்யம் பகுதியில் 7 தரைப்பாலங்கள் ரூ.20 கோடி மதிப்பில் உயர்மட்டப்பாலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரூ.29 கோடி மதிப்பீட்டில் 11 தரைப்பாலங் கள் உயர்மட்டப்பாலங்களாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 60 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த வேதாரண்ய ஈஸ்வரர் திருக்கோவிலுக்கு புதிதாக தேர் உருவாக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெறும் பணி நடை பெறுகிறது.
வேதாரண்யம் வேதாரண்ய ஈஸ்வரர் கோவில் கடற்கரைச்சாலை ரூ.5 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும். பனைக்காட்டில் ரூ.10 கோடி மதிப்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும். தலைகோடரை ஏரி, தாழகொட்டகம் ஏரி ரூ.4 கோடி மதிப்பில் தூர்வாறப்படுகிறது. தலைஞாயிறு, அரிச்சந்திரா நதிப்பகுதியில் ரூ.9 கோடி மதிப்பில் கதவணைகள் கட்டப்படும். கோடியக்கரைபகுதியில் ரூ.2.25 கோடி மதிப்பில் மீன் ஏலக்கூடம் மற்றும் மீன் வலை பின்னும் தளம் அமைக்கப்படும். இதுபோன்ற வளர்ச்சிப்பணிகள் தொடர்ந்து இந்த அரசால் நிறைவேற்றித்தரப்படுகிறது எனபதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, வாக்குகள் பெற நினைக்கிறார். அது ஒரு போதும் நடக்காது. அதேபோன்று இந்த ஆட்சி 10 நாள் தாக்கு பிடிக்குமா?, 1 மாதம் தாக்குப்பிடிக்குமா?, நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யுமா?, மானிய கோரிக்கையை நிறைவேற்றுமா? என்று தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால் பொதுமக்களின் பேராதரவோடு இந்த அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்து மக்கள் பணி ஆற்றிவருகிறது.
ஒரு மு.க.ஸ்டாலின் என்ன, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் இந்த ஆட்சியையும், கட்சியையும் ஒன்றுமே செய்ய முடியாது. டி.டி.வி. தினகரன் தனது கட்சியையே பதிவு செய்யவில்லை. அதை ஒரு அமைப்பாக வைத்துக்கொண்டு, இந்த ஆட்சியை கலைக்கவும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். அ.தி.மு.க.வை யாராலும் அழிக்கவோ, கைப்பற்றவோ அனுமதிக்கமாட்டோம். இவர் எதிர்கட்சியோடு சேர்ந்து, இந்த கட்சியை அழிக்க நினைப்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். இவ்வாறு அவர் பேசினார்.