‘விண்வெளியில் போட்டி இருந்தாலும் போர் ஏற்பட வாய்ப்பு இல்லை’ - இஸ்ரோ தலைவர் கே.சிவன்

‘விண்வெளியில் பல்வேறு நாடுகளுக்கு இடையே போட்டிகள் ஏற்பட்டாலும் போர் ஏற்பட வாய்ப்பு இல்லை’ என்று இளம் விஞ்ஞானிகளின் கேள்விக்கு இஸ்ரோ தலைவர் கே.சிவன் பதில் அளித்தார்.
‘விண்வெளியில் போட்டி இருந்தாலும் போர் ஏற்பட வாய்ப்பு இல்லை’ - இஸ்ரோ தலைவர் கே.சிவன்
Published on

ஸ்ரீஹரிகோட்டா,

நாடு முழுவதும் 9 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விஞ்ஞான பூர்வமாக அறிவியல் பயிற்சி அளிப்பதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சார்பில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் (யுவிகா-2019) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இருந்து 108 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இஸ்ரோ ஆய்வகத்தில் அறிவியல் திட்டம் தொடர்பாக 2 வாரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியை கடந்த 13-ந்தேதி பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தலைமையிடத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் காணொலிகாட்சி மூலம் தொடங்கி வைத்தார். அந்தவகையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு 108 மாணவ, மாணவிகள் வருகை தந்தனர். இவர்கள் இங்குள்ள ராக்கெட் ஏவுதளம், ராக்கெட் கண்காட்சி மையம், நூலகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.

பின்னர் நூலக அரங்கில் 108 மாணவர்கள், இஸ்ரோ தலைவர் கே.சிவனிடம் இஸ்ரோ குறித்து கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: விண்வெளியில் பல்வேறு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போட்டியால் போர் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது? அவ்வாறு வர வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாட்டின் பாதுகாப்பு உள்பட பல காரணங்களுக்காக செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. அவைகளை பாதுகாக்கவே பல்வேறு நடவடிக்கைகளில் முக்கிய நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அனைத்து செயல்பாடுகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைமுறை படுத்தப்படுவதால் போர் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

கேள்வி: சூரியனுக்கு செயற்கைகோள் அனுப்பும் திட்டம் இஸ்ரோவிடம் இருக்கிறதா?

பதில்: ஆம். ஆதித்யா எல்-1 என்ற விண்கலம், சூரியனை ஆய்வு செய்வதற்காக, 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த விண்கலம், பருவநிலை மாறுபாடுகள் பற்றிய, ஆய்வுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

கேள்வி: விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் எந்த நிலையில் உள்ளது?

பதில்: இதற்கான பரிசோதனை முயற்சிகள், தீவிரமாக நடந்து வருகிறது. மொத்தம் 7 நாட்கள் திட்ட பயணம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேள்வி: விண்வெளிக்கு மனிதர்களுக்கு பதில் ரோபோக்களை அனுப்பி ஆய்வு செய்ய முடியுமா?

பதில்: சிறந்த யோசனைக்கு நன்றி. அதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. ஆனால், விண்வெளியில் ஒரு அசாதாரண சூழ்நிலையை ரோபோக்களை விட மனிதர்களே சிறந்த முறையில் கையாள்வார்கள்.

கேள்வி: விண்வெளியில் செயற்கைகோள் கழிவுகள் பெரும் ஆபத்தாக மாறுவதாக கூறப்படுகிறதே?

பதில்: உண்மைதான், விண்வெளி கழிவுகள் அனைத்து நாடுகளுக்கும் சவாலான ஒன்றாகி உள்ளது. மேலும், அவற்றை அகற்றுவதற்கான பணிகளை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செய்து வருகின்றன.

கேள்வி: விண்வெளி வீரர்களாக உருவாக என்ன தகுதி வேண்டும்?

பதில்: விண்வெளி வீரர்களாக தேர்வாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தகுதி இருக்க வேண்டியது அவசியம்.

கேள்வி: விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் திட்டம் இஸ்ரோவிடம் உள்ளதா?

பதில்: அதற்கான ஆய்வு பணிகள், நடந்து வருகின்றன. உங்களை போன்ற இளம் விஞ்ஞானிகள் கை கொடுத்தால் திட்டம் விரைவாக நிறைவேற்றப்படும்.

கேள்வி: இஸ்ரோவின் செயல்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு எந்த அளவு பங்களிப்பு செய்கிறது?

பதில்: நாம், விண்ணில் ஏவும் அனைத்து செயற்கைகோள்களும் ராக்கெட்டுகளும் பொருளாதார ரீதியாக நாட்டுக்கு பெரிய பங்களிப்பை வழங்குகிறது. பேரிடர் காலங்களில் பெரும் பொருள் மற்றும் உயிர் சேதங்கள் தவிர்க்கப்படுகின்றன. பல்வேறு துறைகளில் இஸ்ரோ நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றுவதால் வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர், இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்டு இஸ்ரோவின் செயல்பாடுகளை அறிய வந்துள்ள மாணவர்களாகிய நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் பிரமிக்க வைக்கிறது. வரும் காலத்தில் 108 பேரும் இஸ்ரோவில் விஞ்ஞானிகளாக வந்து மேலும் நம் நாட்டை விண்வெளி துறையில் முதலிடத்துக்கு கொண்டு செல்ல வாழ்த்துகிறேன் என்றார்.

பயிற்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள் ஜே.கே.ஆதித்யா, ஆர்.நித்யராஜ் மற்றும் நெல்லை மாவட்டம் இலஞ்சியை சேர்ந்த மாணவி பி.சமீரா ஆகியோரும், புதுச்சேரியில் இருந்து எம்.பவித்ரா, கே.கவிபாரதி, ஜி.மோனிகா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com