திருச்சி- நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு

திருச்சி - நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
Published on

திருச்சி,

திருச்சியில் இருந்து நெல்லைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினமும் காலை 7.15 மணிக்கு திருச்சியில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயிலை கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருச்சி - நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூலை மாதம் முதல் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்படும் என்று கடந்த மே மாதம் மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு அறிவித்தார். அதன்படி திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்படுவதற்கான தொடக்க விழா நேற்று காலை 7 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் நடந்தது.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்

இதற்கு திருச்சி ரெயில்வே மண்டல மேலாளர் உதய குமார்ரெட்டி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்ட ரெயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறும் போது, திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்ட இந்த ரெயில் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு ரெயில் பயணிகள் பயன் அடைவார்கள். இதற்காக ரெயில்வே மந்திரிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார். பின்னர் அதே ரெயிலில் ஏறி சொந்த தொகுதியான நாகர்கோவிலுக்கு சென்றார். இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிதாக நீட்டிக்கப்பட்டு உள்ள இந்த ரெயில் (தடம் எண் 22627) திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் காலை 7.05 மணிக்கு புறப்படும். 7.32 மணிக்கு மணப்பாறைக்கும், 8.25-க்கு திண்டுக்கல், 9.20-க்கு மதுரை, 10.10-க்கு விருதுநகர், 10.33-க்கு சாத்தூர், 10.58-க்கு கோவில்பட்டி, 11.39-க்கு வாஞ்சிமணியாச்சி, 12.30-க்கு நெல்லை, மதியம் 1.10-க்கு வள்ளியூர், 1.52-க்கு நாகர்கோவில், 2.21-க்கு குளித்துறை, 3.25-க்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

திருச்சியில் இருந்து செல்லும் இதே ரெயில் தான் பின்னர் நெல்லையில் இருந்து புறப்பட்டு திருச்சி வரும். தற்போது திருவனந்தபுரம் வரை இந்த ரெயில் நீட்டிக்கப்பட்டு உள்ளதால் அங்கிருந்து தினமும் மறுமார்க்கத்தில் வேறு ஒரு புதிய ரெயில் (தடம் எண் 22628) இயக்கப்படுகிறது. அதன்படி இந்த ரெயில் தினமும் காலை 11.55 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும். பின்னர் பகல் 12.29-க்கு குளித்துறைக்கும், 12.55-க்கு நாகர்கோவில், 1.34-க்கு வள்ளியூர், 2.35-க்கு நெல்லை, 3.05-க்கு வாஞ்சி மணியாச்சி, 3.33-க்கு கோவில்பட்டி, 3.53-க்கு சாத்தூர், மாலை 4.18-க்கு விருதுநகர், 5.20-க்கு மதுரை, 6.20-க்கு திண்டுக்கல், 7.19-க்கு மணப்பாறை, இரவு 8.15 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடையும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com